ADDED : செப் 12, 2026 08:31 PM

புதுச்சேரி: புதுச்சேரி, தட்டாஞ்சாவடி தொகுதி, இடைத்தேர்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு மற்றும் வி.வி.பேட்., இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் முதற்கட்ட தற்செயல் கலப்பு நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமை தாங்கினார். தேர்தல் பொது பார்வையாளர் கொர்லா சுவர்ணா பாண்டாதாஸ், போலீஸ் பார்வையாளர் ஓம்பிரகாஷ் திரிபாதி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த முதற்கட்ட தற்செயல் கலப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மேலாண்மை அமைப்பின் மென்பொருள் மூலம் நடந்தது.
தொடர்ந்து, ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பேட்., இயந்திரங்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு, ரெட்டியார்பாளையத்தில் உள்ள தேர்தல் துறையின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
முன்னதாக, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் பேசுகையில், ‘தட்டாஞ்சாவடி தொகுதியில் மொத்தம் 31 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொகுதியில், 26 ஆயிரத்து 797 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 12 ஆயிரத்து 520 ஆண் வாக்காளர்கள், 14 ஆயிரத்து 272 பேர் பெண் வாக்காளர்கள், 5 பேர் பொதுப்பாலின வாக்காளர்கள், மேலும், 13 சேவை வாக்காளர்களும் உள்ளனர்.
தேர்தலுக்கு மொத்தம், 120 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் நிலையில், 150 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், தட்டாஞ்சாவடி தொகுதியில் இரண்டு ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது,’ என்றார்.
