ரயில்வே கேட்டில் சிக்கிய ஆம்புலன்ஸ் நோயாளி பரிதாப சாவு
ரயில்வே கேட்டில் சிக்கிய ஆம்புலன்ஸ் நோயாளி பரிதாப சாவு
ADDED : செப் 12, 2026 04:12 AM
காரைக்கால்: காரைக்காலில் ரயில்வே கேட்டில் சிக்கிய ஆம்புலன்சில் இருந்த நோயாளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு செல்லும் முக்கிய வழித்தடங்களான காமராஜர் சாலை, பாரதியார் சாலை பகுதிகளில் உள்ள ரயில்வே கேட்டுகள், சரக்கு ரயில்கள் கடந்து செல்லும் நேரங்களில் 10 நிமிடங்களுக்கு மேலாக மூடப்படும்.
இந்நிலையில் நேற்று தனியார் மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூருக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்ட நோயாளி ஒருவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆம்புலன்ஸ் அவசரமாக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, காமராஜர் சாலையில் உள்ள ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால், ஆம்புலன்ஸ் சிக்கிக் கொண்டாது. சரக்கு ரயில் கடந்து செல்லும் வரை ஆம்புலன்ஸ் காத்திருக்க வேண்டி இருந்தது.
இதனால், ஆம்புலன்சில் நோயாளியுடன் இருந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ரயில்வே கேட்டை திறந்து ஆம்புலன்சிற்கு வழிவிடுமாறு கேட் கீப்பரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
ஆனால், சரக்கு ரயில் சென்ற பிறகே கேட் திறக்கப்பட்டது. பின், ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, நோயாளியை டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
