அப்போலோ மருத்துவமனை ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆலோசனை
அப்போலோ மருத்துவமனை ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆலோசனை
UPDATED : அக் 11, 2026 05:56 PM
ADDED : அக் 11, 2026 05:47 PM

புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனையின் ‘ரோபோ கனெக்ட்’ தலைப்பில் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்தாலோசனை அக்கார்டு ஓட்டலில் நேற்று நடந்தது.
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் பங்கேற்று, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதில், தொழில்நுட்பத்தையும் தாண்டி, மருத்துவம் மற்றும் நோயாளி நலனில் அர்த்தமுள்ள மாற்றங்கள் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, 30க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், புதுச்சேரியின் முன்னணி டாக்டர்கள் பங்கேற்று, நவீன ரோபோடிக் உதவியுடன் அறுவை சிகிச்சை மற்றும் சிக்கலான மருத்துவ முறைகளில் புதிய தொழில்நுட்பங்களை கையாளுவது குறித்து விவாதித்தனர்.
நிகழ்ச்சியில், எஸ்.எஸ்.ஐ., மந்தரா, மெரில், ஹ்யூகோ ஆர்.ஏ.எஸ்., மற்றும் மேகோ ஸ்ட்ரைக்கர் போன்ற பல்வேறு ரோபோடிக் அறுவை சிகிச்சை கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
சென்னை மண்டல அப்போலோ மருத்துவமனை தலைவர் இளங்குமரன் கலியமூர்த்தி பேசுகையில், ‘அப்போலோ மருத்துவமனையில் நவீன தொழில்நுட்பமும், டாக்டர்களின் அனுபவமும் இணைந்து, ரோபோடிக் சிகிச்சையின் உண்மையான பலன் நோயாளிகளுக்கு கிடைக்கிறது.
அதிக துல்லியத்தையும், கட்டுப்பாட்டையும் தருவதோடு, ரத்த இழப்பை குறைக்கவும், விரைவாக குணமடைந்து நோயாளிகள் அன்றாட பணிகளுக்கு திரும்பவும் உதவுகிறது.
அப்போலோ மருத்துவமனைகளில் யூராலஜி, மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், இரைப்பை குடலியல், பொது அறுவை சிகிச்சை, கல்லீரல்–கணையம்–பித்தப்பை அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை பெருங்குடல் அறுவை சிகிச்சை, மார்பக, மார்பக கூடு அறுவை சிகிச்சை, எலும்பியல் புற்றுநோயியல் மற்றும் இதயவியல் உள்ளிட்ட பல மருத்துவ பிரிவுகளில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன’ என்றார்.
சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் பேசுகையில், ‘புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறை அமலில் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் அடுத்த சில ஆண்டுகளில் ரோபோடிக் அறுவை சிகிச்சை அறிமுகம் செய்யப்படும். அரசிடம் இருந்து உரிய அனுமதி பெற்ற பின் அரசு மருத்துவமனைகளில் ரோபோடிக் சிகிச்சை துவங்கப்படும்’ என்றார்.
