UPDATED : அக் 11, 2026 05:57 PM
ADDED : அக் 11, 2026 05:47 PM
புதுச்சேரி: திருக்கனுார் அடுத்த வாதானுார், குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன், 30; லிங்காரெட்டிப்பாளையம், அங்காளயம்மன் கோவிலில் சாமி அலங்காரம் செய்யும் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும், லிங்காரெட்டிப்பாளையத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் பிரபாகரன் பணியில் இருந்தபோது, அங்கு வந்த முருகன், அவரது மகன்கள் ஜீவா, கோகுல் ஆகியோர் பிரபாகரனை தாக்கினர்.
இதுகுறித்து பிரபாகரன், தனது உறவினரான குமாரப்பாளையம் லோகேஷ் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு வந்த லோகேஷ், பிரபாகரனை தாக்கியது குறித்து முருகன், அவரது மகன்கள் ஜீவா, கோகுல் ஆகியோரிடம் கேட்டார். ஆத்திரமடைந்த முருகன் உள்ளிட்ட மூவரும் பிரபாகரன், லோகேஷ் ஆகியோரை கத்தி மற்றும் கையால் சராமரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
படுகாயமடைந்த பிரபாகரன், லோகேஷ் ஆகியோரை மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அழைத்து சென்றபோது, லோகேஷிற்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால், லோகேஷ் ஜிப்மரிலும், பிரபாகரன் கதிர்காமம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
பிரபாகரன் புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, முருகன், 46; ஜீவா, 20; கோகுல், 19; ஆகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
