/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இலவச மனை பட்டாக்கள் புதுச்சேரிக்கு மட்டும் தானா? அமைச்சர் சாய்சரவணனுடன் எம்.எல்.ஏ.,க்கள் மோதல்
/
இலவச மனை பட்டாக்கள் புதுச்சேரிக்கு மட்டும் தானா? அமைச்சர் சாய்சரவணனுடன் எம்.எல்.ஏ.,க்கள் மோதல்
இலவச மனை பட்டாக்கள் புதுச்சேரிக்கு மட்டும் தானா? அமைச்சர் சாய்சரவணனுடன் எம்.எல்.ஏ.,க்கள் மோதல்
இலவச மனை பட்டாக்கள் புதுச்சேரிக்கு மட்டும் தானா? அமைச்சர் சாய்சரவணனுடன் எம்.எல்.ஏ.,க்கள் மோதல்
ADDED : மார் 21, 2025 04:29 AM
புதுச்சேரி : சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்;
சிவசங்கர்(சுயேச்சை ): புதுச்சேரி அரசு பழங்குடியினர் துணை திட்டத்தை உருவாக்கி, மனைப்பட்டா வழங்குவது, வீடு கட்டி தருவது போன்ற திட்டங்களை அமலாக்கி செய்த செலவை மத்திய அரசிடம் பெறும் நடவடிக்கையை துவங்குமா.
அமைச்சர் சாய்சரவணன்குமார்: புதுச்சேரி அரசு பழங்குடியினர் துணை திட்டத்தை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் புதுச்சேரியில் 2 ஆயிரம் ஆதிதிராவிடர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க உள்ளோம். இதில் பழங்குடியினரும் அடங்குவர்.
இந்த அறிவிப்பினை அமைச்சர் சாய்சரவணன்குமார் வெளியிட்டதும், காரைக்கால் எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
பி.ஆர்.சிவா: புதுச்சேரி அரசு மாற்றந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. அனைத்து இலவச மனைப் பட்டாக்களும் புதுச்சேரி பகுதியில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சாய்சரவணன்குமார்:இலவச மனைப்பட்டா சம்பந்தமாக அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் கடிதம் எழுதப்பட்டது. உங்களுக்கு தேவையென்றால் நீங்கள் தான் கேட்க வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் மட்டும் பேசாமல், களத்திலும் இறங்கி பணியாற்ற வேண்டும்.
நேரு(சுயேச்சை): 1980ம் ஆண்டுக்கு பிறகு புதுச்சேரி நகர பகுதியில் ஆதிதிராவிடர்களுக்கு பட்டா வழங்கவில்லை. இதனால் நகர பகுதியில் மனைப்பட்டா வழங்க வேண்டும்.
நாஜிம் (தி.மு.க.,): ஆதிதிராவிடர் நலத்துறைக்கு காரைக்காலில் உதவி இயக்குனர் கூட இல்லை. ஒரு அதிகாரி கூடுதலாக பணியை கவனித்து வருகிறார். முதலில் உதவி இயக்குனரை நியமனம் செய்ய வேண்டும்.
பி.ஆர்.சிவா(சுயேச்சை): அமைச்சர் பொறுப்புடன் பேச வேண்டும். 50 ஆண்டுக்கும் மேல் புறம்போக்கு நிலத்தில் மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு கூட பட்டா வழங்கவில்லை. சட்டத்துக்கு புறம்பாக அமைச்சர் செயல்படுகிறார். அவர் ஏற்கனவே குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சராக இருந்தபோதும் இப்படித்தான் செயல்பட்டார்.இதை நான் புகாராக கூறுகிறேன். உங்கள் தொகுதியில் ஒரு வேலையும் நடக்கவில்லை. முதலில் நியாயமாக நடந்து கொள்ளுங்கள்.
சாய்சரவணன்குமார்: உங்களுக்கு இலவச மனைப்பட்டா வேண்டும் என்றால் இடத்தை தேர்வு செய்து கொடுங்கள் ஆய்வு செய்து தரப்படும். அதற்காக நியாயம், அநியாயம் என்று பேசக்கூடாது. எனக்கு நீங்கள் சான்றிதழ் கொடுக்க தேவையில்லை. சட்டத்துக்கு புறம்பாக நான் எவ்வாறு செயல்பட்டேன் என அவையில் சொல்லுங்கள். அதை எதிர்கொள்ள தயாராகவே உள்ளேன்.
பி.ஆர்.சிவா: இதை சொன்னால் ஆக்ஷன் எடுப்பார்கள். அதனால் தான் சொல்லவில்லை.
நாஜிம்: அமைச்சர் வாதத்தை ஏற்க முடியாது. அதிகாரிகள் இருந்தால் தான் பணிகள் நடைபெறும்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: அமைச்சர் அவசரகதியில் 2 ஆயிரம் பேருக்கு மனைப்பட்டா ஆகஸ்ட் மாதம் கொடுப்போம் என்கிறார். ஆட்சேபனை இல்லாமல் நிலத்தை ஆர்ஜிதம் செய்வது பெரிய வேலை. அமைச்சர் வாக்குறுதி அளித்துவிட வேண்டாம். எம்.எல்.ஏ.,க்கள் சில கேள்விகள் கேட்கின்றனர். அந்த கேள்விகளுக்கு அமைச்சர் பதில் சொல்ல வேண்டும். ஏன் தேவையில்லாமல் பதட்டப்பட வேண்டும். ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் உங்களால் இலவசமனைப்பட்டா கொடுக்க முடியுமா. சொல்லுவது முக்கியம் அல்ல. அதை சொல்லியப்படி செய்ய வேண்டும். நிலம் எடுத்து இலவச மனைப்பட்டா உடனடியாக நடந்து விடாது.
சாய்சரவணக்குமார்: உங்கள் தொகுதியில் 118 பேருக்கு மனைப்பட்டா வழங்க உள்ளோம். இதற்கான கடிதத்தை 2 மாதம் முன்பே உங்களுக்கு அனுப்பிவிட்டோம். ஆனால் உங்களிடம் இருந்து பதில் இல்லை.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: சண்டை சச்சரவு இன்றி மனைப்பட்டா வழங்க பேசி வருகிறோம். அவசர கதியில், ஆவேசமாக பதட்டத்தோடு பேச வேண்டாம். இப்போது பெருமுயற்சி எடுத்தால் அடுத்த ஆண்டு பட்டா வழங்கலாம்.
அமைச்சர் நமச்சிவாயம்: ஏற்கனவே நடவடிக்கையில் உள்ள பட்டாக்களைத் தான் வழங்க உள்ளோம். இது தொடர்பாகத் தான் எம்.எல்.ஏ.,க்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதை தான் அமைச்சர் சாய்சரவணக்குமார் சொல்கிறார்.புதிதாக பட்டா வழங்கவில்லை. புதிதாக பட்டா வழங்க நிதி ஒதுக்கனும், நிலம் தேர்வு செய்யனும், ஆர்ஜிதம் செய்ய வேண்டும். ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதால் பட்டா வழங்க முடியும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.