கோர்ட் விசாரணைக்கு ஆஜராகாத 3 பேருக்கு பிடிவாரண்ட்
கோர்ட் விசாரணைக்கு ஆஜராகாத 3 பேருக்கு பிடிவாரண்ட்
ADDED : ஆக 27, 2026 07:12 PM
புதுச்சேரி: கஞ்சா விற்பனை வழக்கில் ஜாமினில் சென்று கோர்ட் விசாரணைக்கு ஆஜராகாத 3 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, லாஸ்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்ததாக 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி மூன்றாவது கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதி முன்னிலையில் நடந்து வருகிறது. இதற்கிடையே, வழக்கில் தொடர்புடைய அனைவரும் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு கடந்த 11ம் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் தொடர்புடைய லாஸ்பேட்டை விமான நிலையம் பின்புறத்தை சேர்ந்த ராமச்சந்திரன், 24; சாரம், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த அசோக்குமார், 30; ஆகிய இருவரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர்களது சார்பாக வழக்கறிஞர்களும் ஆஜராகி விலக்கு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், கோர்ட் அளித்த நிபந்தனைகளை மீறியதாக அவர்கள் மீது பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதேபோல், லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 2022ம் ஆண்டு மற்றொரு கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் சென்ற தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, காமராஜர் நகரை சேர்ந்த அன்பழகன், 61; கடந்த 3ம் தேதி கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை. இதனால், அவர் மீதும் நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து லாஸ்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பாபு தனித்தனியாக அளித்த புகார்களின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
