பாரதியார் பல்கலைக்கூட படிப்புகளுக்கு 11ம் தேதி திறன் தேர்வு அறிவிப்பு
பாரதியார் பல்கலைக்கூட படிப்புகளுக்கு 11ம் தேதி திறன் தேர்வு அறிவிப்பு
ADDED : ஜூலை 03, 2026 03:03 AM
புதுச்சேரி: பாரதியார் பல்கலைக்கழகூட படிப்புகளுக்கான திறன் தேர்வு குறித்த வழிகாட்டுதல்களை சென்டாக் வெளியிட்டுள்ளது.
அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூட பி.வி.ஏ., விஷூவல் ஆர்ட்ஸ், பி.பி.ஏ., இசை, பி.பி.ஏ., நடனம் உள்ளிட்ட படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான திறன் தேர்வுகள் வரும் 11ம் தேதி காலை 10 மணிக்கு பாரதியார் பல்கலைக்கூட வளாகத்தில் நடக்கிறது.
தேர்வர்கள் அனைவரும் தேர்வு தொடங்குவதற்கு முன், பாரதியார் பல்கலைக்கூடத்தின் முதல்வர் அலுவலகத்தில் ரிப்போர்ட் செய்ய வேண்டும்.
காலை 10:00 மணிக்கு தேர்வு தொடங்குவதால், அதற்கு முன்பாகவே மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வந்து சேருவது அவசியம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இசை மற்றும் நடனம் சார்ந்த பி.பி.ஏ., படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, அவர்களின் திறனை மதிப்பிடுவதற்காக கல்லுாரி நிர்வாகத்தால் பிரத்யேகத் திறன் தேர்வு நடத்தப்படும். இத் தேர்வில் மாணவர்கள் வெளிப்படுத்தும் திறமையின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.
காட்சி சார்ந்த வி.பி.ஏ., படிப்பிற்கான திறன் தேர்வு இரண்டு முக்கிய பிரிவுகளை உள்ளடக்கியது.
இதில் வரைதல்தேர்வுக்கு ஒரு மணி நேரமும், வண்ணம் தீட்டுதல்தேர்வுக்கு ஒன்றரை மணி நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவும் தலா 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
தேர்வர்கள் கவனத்திற்கு, தேர்வு எழுதுவதற்கான உயர்தர வெள்ளை வரைபடத் தாள் கல்லுாரி சார்பில் வழங்கப்படும். இருப்பினும், பென்சில், ரப்பர், ஸ்கேல், கத்தரிக்கோல் மற்றும் நீர் வண்ணங்கள் உள்ளிட்ட தேவையான உபகரணங்களை விண்ணப்பதாரர்களே எடுத்து வர வேண்டும்.
பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்களில் 40 சதவீதமும், கல்லுாரி நடத்தும் திறன் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 60 சதவீதமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த இரண்டு மதிப்பெண்களையும் ஒருங்கிணைத்தே சேர்க்கைக்கான இறுதித் தகுதிப் பட்டியல் நிர்ணயிக்கப்படும் என, பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
