டெங்குவை தடுக்க நிலவேம்பு கஷாயம் அரசுக்கு பா.ஜ., நிர்வாகி கோரிக்கை
டெங்குவை தடுக்க நிலவேம்பு கஷாயம் அரசுக்கு பா.ஜ., நிர்வாகி கோரிக்கை
ADDED : செப் 19, 2026 09:38 PM
புதுச்சேரி: 'டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கு, அனைத்து சுகாதார நிலையங்களிலும் நிலவேம்பு கஷாயம் வழங்க வேண்டும்' என அரசுக்கு பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, சுகாதாரத் துறையை கவனிக்கும் முதல்வர் ரங்கசாமி, சுகாதாரத் துறை செயலர் குமார், இயக்குனர் செவ்வேள் ஆகியோருக்கு புதுச்சேரி பா.ஜ., மாநில சிறப்பு அழைப்பாளர் வீரராகவன் அனுப்பியுள்ள மனு:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தினசரி அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் பலர் டெங்கு காய்ச்சல் பாதித்து இறந்துள்ளனர்.
இதனால், உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்.
தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிட வேண்டும். மேலும், பருவ மழை காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்படுவது வழக்கம்.
அதைபோன்று, தற்போது டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்களில் நிலவேம்பு கஷாயம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
