ADDED : செப் 19, 2026 06:03 PM
புதுச்சேரி: டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க அனைத்து சுகாதார நிலையங்களில் நிலவேம்பு கஷாயம் வழங்க வேண்டுமென பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.
பா.ஜ., மாநில சிறப்பு அழைப்பாளர் வீரராகவன் அறிக்கை:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தினசரி அதிகரித்து, 9 பேர் இறந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கியிருந்த 3 மாணவர்கள் டெங்கு காய்ச்சல் பாதித்து இறந்துள்ளனர்.
இதனால், டெங்கு காய்ச்சல் உயிரிழப்பு 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 244 பேர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரி அரசு டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தனி கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், பருவ மழை காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்படுவது போன்று, தற்போது டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்களில் நிலவேம்பு கஷாயம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
