ரூ.13,600 கோடிக்கு பட்ஜெட்
-புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடந்த ஆண்டு ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தாலும், திருத்திய பட்ஜெட்டில் அரசின் செலவினம் உயர்ந்ததால், பட்ஜெட் ரூ.13,235 கோடியாக உயர்ந்தது. இந்நிலையில், ரூ. 13,600 கோடிக்கான பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துவிட்டதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.
காகிதமில்லா சட்டசபை
புதுச்சேரி சட்டசபையை காகிமில்லாத நடைமுறைக்கு மாற்ற மத்திய அரசு அனுமதி வழங்கி அதற்கான செலவினத்திற்கான முழு நிதியை பார்லிமெண்ட் விவகாரத் துறை ஏற்றுக்கொண்டது. அதன்படி, கொல்கத்தாவை சேர்ந்த நிம்பஸ் சிஸ்டம் என்ற நிறுவனம் மூலம் 8.16 கோடி மதிப்பில் மின்னணு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன. கடந்த மாதம் நடந்த கூடுதல் செலவினத்திற்கான கூட்டத்தில், காகிதமில்லா சட்டசபைக்காக எம்.எல்.ஏ.க்கள் முன்பு டேப்லெட் வைத்து பரிசோதிக்கப்பட்டது. நேற்றைய பட்ஜெட் கூட்டம் துவங்கியதும், அனைத்து எம்.எல்.ஏக்கள் இருக்கையின் முன் டேப்லெட் வைக்கப்பட்டு, கவர்னரின் உரை தொடுதிரையில் பளீச்சிட்டது.
தமிழில் உரையாற்றிய 3வது கவர்னர்
சட்டசபை கூட்டத் தொடர் துவக்கத்தில், வழக்கமாக கவர்னர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றுவார். அதனுடைய தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். இந்த நடைமுறை தமிழ் தெரிந்த கவர்னர்களால் மாறியது. கவர்னராக பொறுப்பு வகித்த தமிழிசை 2021, 2022, 2023 என 3 ஆண்டுகள், தமிழில் பட்ஜெட் உரையாற்றினார். தமிழிசைக்கு பின்பு கவர்னராக பொறுப்பு ஏற்ற சி.பி., ராதாகிருஷ்ணன், கடந்த ஆண்டு தமிழில் பட்ஜெட் உரையாற்றினார். தற்போது கவர்னர் கைலாஷ்நாதனும் தமிழில் உரையாற்றினார். இதன் மூலம் தமிழில் உரையாற்றிய 3வது கவர்னர் என்ற பெருமை பெற்றுள்ளார். இத்துடன் 5 ஆண்டுகள் சட்டசபையில் தமிழில் கவர்னர்கள் உரையாற்றி உள்ளது குறிப்பிடதக்கது.
வைத்தியநாதன் எம்.எல்.ஏ.,வுக்குசபாநாயகர் செல்வம் எதிர் கேள்வி
சட்டசபையில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., மும்மொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எழுப்பிய கேள்வி குறித்து சபாநாயகரிடம் கேட்டபோது, அவரின் மகன் எந்த பள்ளியில் படிக்கிறார் என கேளுங்கள். புதுச்சேரி அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தியுள்ளோம். யார் ஆட்சியில் அரசு பள்ளிகள் சி.பி.எஸ்.இ.,யாக மாற்றப்பட்டது என்பதை வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் என பதிலளித்தார்.