சாலையில் சுற்றித்திரிந்த மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு
சாலையில் சுற்றித்திரிந்த மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு
ADDED : நவ 16, 2026 06:07 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டை இ.சி.ஆரில், போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாட்டின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லாஸ்பேட்டை போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் புஷ்பலிங்கம் மற்றும் போலீசார் நேற்று (நவ.,15) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, இ.சி.ஆர்., தனியார் மருத்துவமனை எதிரே சாலையின் நடுவே மாடு ஒன்று உரிமையாளர் இன்றி சுற்றித்திரிந்தது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதுடன், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது.
இதையடுத்து, போலீசார் அந்த மாட்டை பிடித்து, உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தினர். அதில், லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகர், 20வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ராமலிங்கம், 66; மாட்டின் உரிமையாளர் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, போலீசார் ராமலிங்கம் மீது மாட்டை சாலையில் அவிழ்த்து விட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
