UPDATED : அக் 31, 2026 06:12 PM
ADDED : அக் 31, 2026 06:08 PM
புதுச்சேரி: ஜி.எஸ்.எல்.வி.எப்-18 ராக்கெட்டினை விண்ணப்பில் வெற்றிக்கரமாக நிலை நிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் ரங்கசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர், இஸ்ரோவிற்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தி:
இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், நேவிக் பிராந்திய செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பை மேம்படுத்துவதற்காக என்.வி.எஸ்-3 செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. எப்-18 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
நமது நாட்டின் தேவைகளுக்கேற்ப துல்லியமான இருப்பிடத் தகவல் மற்றும் வழிகாட்டுதல் சேவைகளை வழங்கும் நேவிக் அமைப்பு, விண்வெளித் துறையில் இந்தியாவின் தன்னிறைவை வலுப்படுத்தும் முக்கியமான முயற்சியாகும்.
இந்த அமைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான இஸ்ரோவின் அர்ப்பணிப்பும் அயராத உழைப்பும் பாராட்டுக்குரியவை. விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் காண்பது, நம் அனைவருக்கும் பெருமிதம் அளிப்பதுடன், மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சாதிக்க ஊக்கமளிக்கும் உந்துசக்தியாகத் திகழ்கிறது
இந்த விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக அமைந்து, என்.வி.எஸ்-3 செயற்கைக்கோள் அதன் நோக்கங்களைச் சிறப்பாக நிறைவேற்ற புதுச்சேரி மக்கள் சார்பில் வாழ்த்துகள். இஸ்ரோவின் சாதனைப் பயணம் தொடர்ந்து சிறக்கட்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
