/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் ரங்கசாமி போட்டியிடும்... தொகுதி எது?தொடரும் 'ராசி' அரசியலால் பரபரப்பு
/
முதல்வர் ரங்கசாமி போட்டியிடும்... தொகுதி எது?தொடரும் 'ராசி' அரசியலால் பரபரப்பு
முதல்வர் ரங்கசாமி போட்டியிடும்... தொகுதி எது?தொடரும் 'ராசி' அரசியலால் பரபரப்பு
முதல்வர் ரங்கசாமி போட்டியிடும்... தொகுதி எது?தொடரும் 'ராசி' அரசியலால் பரபரப்பு
ADDED : பிப் 09, 2026 04:48 AM

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என,புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியல் களம் வேறு; புதுச்சேரி அரசியல் களம் வேறு. கடைசி நேரத்தில் மக்களை சந்திப்பது புதுச்சேரியில் ஒன்றுக்கும் உதவாது. அப்படிப்பட்ட அரசியல்வாதிகளை புதுச்சேரி மக்கள் நம்புவதும் கிடையாது. ஏற்றுக்கொள்ளுவதும் இல்லை. இதனால் தான், புதுச்சேரியில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சுயேச்சைகள் என, அனைத்து கட்சியினரும் தேர்தல் வேலைகளை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டனர்.
பல முறை மக்களை சந்தித்து கையெடுத்து கும்பிட்டு பரிசுகளை வழங்கி விட்டனர். அடுத்து தீபாவளி, பொங்கலுக்கு பரிசு தொகுப்பினை வாரி வழங்கிய, தெம்புடன் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி விட்டனர். ஆனால், முதல்வர் ரங்கசாமி தொகுதியான தட்டாஞ்சாவடியில் மட்டும் தேர்தல் பணிகள் 'கப்சிப்' என்று அமைதியாக இருக்கிறது.
முதல்வர் ரங்கசாமி எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்பது தெரியாததே தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் சூடு பிடிக்காமல் இருப்பதற்கு காரணம். முதல்வர் ரங்கசாமி மவுனமாக இருப்பதற்கும் பின்னால் ஒரு ராசி கதையும் இருக்கிறது என்கின்றனர் என்.ஆர்.காங்., கட்சியினர்.
அவர்கள் கூறியதாவது:
எந்த தேர்தலில் முதல்வர் ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரோ அப்போதெல்லாம் அவர் சி.எம்., ஆகி விடுவார். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் ஆட்சியை இழந்து விடுவார். அந்த ராசி தான், அவருக்கு ஒவ்வொரு தேர்தலிலும் தொடருகிறது.
கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ரங்கசாமி கதிர்காமம், இந்திரா நகர் என, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அந்த இரண்டு தொகுதிகளிலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். அப்போது என்.ஆர்.காங்., 15 எம்.எல்.ஏக்கள், ஒரு சுயேச்சை ஆதரவுடன் ரங்கசாமி முதல்வரானார்.
அடுத்து 2016ம் சட்டசபை தேர்தலில் இந்திரா நகர் தொகுதியில் மட்டுமே முதல்வர் ரங்கசாமி போட்டியிட்டார். அந்த தேர்தலில் என்.ஆர்.காங்., தோல்வியடைந்து ஆட்சியை பறி கொடுத்தது. மீண்டும் முதல்வராகும் ரங்கசாமியின் கனவும் தகர்ந்தது.
அடுத்து 2021ம் தட்டாஞ்சாவடி, ஏனாம் என, இரண்டு சட்டசபை தொகுதிகளில் முதல்வர் ரங்கசாமி போட்டியிட்டார். இதில் தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றியும், ஏனாம் தொகுதியில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்தார். இருந்தாலும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராசியில் மீண்டும் முதல்வராக ஆட்சி நடத்தி வருகிறார். எனவே இந்த முறையும், இரண்டு தொகுதிகளில் முதல்வர் போட்டியிட விரும்புகிறார்.
ஆனால், அந்த இரண்டு தொகுதிகளில் எந்தந்த தொகுதிகள் என்று இன்னும் அவர் முடிவு செய்யவில்லை. ஆன்மிகவாதியான ரங்கசாமி எதையும் நல்ல நேரம் பார்த்து தான் செய்வார். குறிப்பாக அப்பா பைத்தியசாமியிடம் குலுக்கல் சீட்டு போட்டு உத்தரவு வாங்கி தான் போட்டியிடும் தொகுதியை முடிவு செய்வார்.
அதற்கான நல்ல நேரம் இன்னும் கனியவில்லை. அதனால் தான் தேர்தல் பணிகளும் தட்டாஞ்சாவடி தொகுதியில் இன்னும் தொடங்கவில்லை' என்கின்றனர்.
அப்பா பைத்தியசாமியிடம் முதல்வர் ரங்கசாமி அருள்வாக்கு கேட்பது ஒரு பக்கம் இருந்தாலும், தங்களது தொகுதியை ரங்கசாமி கேட்டுவிடுவாரோ என்று என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,க்களும் கலக்கத்தில் இருக்கின்றனர்.
சாமி.. முதல்வர் தொகுதியை கேட்டால் மறுப்பு ஏதும் சொல்ல முடியாது. ராஜினமா செய்துவிட்டு அவருக்காக தேர்தல் பணியை பார்க்க வேண்டியது தான். அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளிவிடாதே.... குலுக்கல் சீட்டில் வேறு யார் பெயராவது; யார் தொகுதியாவது ஒதுக்கி கொடுத்து விடு என்று முதல்வர் ரங்கசாமி வணங்கும் அப்பா பைத்திய சுவாமி கோவிலுக்கு தினமும் சென்று மனு போட்டு மனமுருகி வேண்டுதல் வைத்து வருகின்றனர்.
மறுபக்கம் எந்த தொகுதி வேண்டுமென்றாலும் முதல்வர் ரங்கசாமி நிற்கட்டும். நாங்கள் பார்த்து கொள்கிறோம் என, பசையிலுள்ள வலுவான வேட்பாளரை நிறுத்தப் எதிர்கட்சிகளும் தயாராகி வியூகம் வகுத்து வருவதால் புதுச்சேரி அரசியல் சூடு பிடித்துள்ளது.

