/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி மாநில அந்தஸ்திற்காக தேர்தலை... புறக்கணிக்க தயார்! சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி ஆவேசம்: என்.ஆர்.காங்., முடிவிற்கு தி.மு.க.,வும் ஆதரவு
/
புதுச்சேரி மாநில அந்தஸ்திற்காக தேர்தலை... புறக்கணிக்க தயார்! சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி ஆவேசம்: என்.ஆர்.காங்., முடிவிற்கு தி.மு.க.,வும் ஆதரவு
புதுச்சேரி மாநில அந்தஸ்திற்காக தேர்தலை... புறக்கணிக்க தயார்! சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி ஆவேசம்: என்.ஆர்.காங்., முடிவிற்கு தி.மு.க.,வும் ஆதரவு
புதுச்சேரி மாநில அந்தஸ்திற்காக தேர்தலை... புறக்கணிக்க தயார்! சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி ஆவேசம்: என்.ஆர்.காங்., முடிவிற்கு தி.மு.க.,வும் ஆதரவு
UPDATED : பிப் 13, 2026 06:34 AM
ADDED : பிப் 13, 2026 05:55 AM

புதுச்சேரி 15வது சட்டப்சபையின் 6வது கூட்டத்தொடர் நேற்று காலை 9:30 மணிக்கு கூடியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி ஐந்து மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, நடந்த விவாதம் பின்வருமாறு:
எதிர்க்கட்சித் தலைவர் சிவா: புதுச்சேரி மக்கள் மாநில சுயாட்சியை விரும்புகின்றனர். முதல்வர் ரங்கசாமி, மாநில அந்தஸ்துக்காக தான் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததாக தெரிவித்திருந்தார். ஆனால் முதல்வரின் முதல் கோரிக்கையே தோல்வி அடைந்துள்ளது.
மத்திய அரசு புதுச்சேரிக்கான கடனை தள்ளுபடி செய்யாததால் மாநில வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் வளர்ச்சி சீர்குலைந்து, கடன் சுமை அதிகரித்துள்ளது. விமான நிலைய விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிற்சாலைகள் அதிகளவில் வருவதற்கு சலுகைகள் அறிவிக்க வேண்டும். இரட்டை இன்ஜின் ஆட்சியில் புதுச்சேரிக்கு மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்கவில்லை. மாநில அந்தஸ்துக்காக முதல்வர் தேர்தலை புறக்கணிக்க தயாரா.
முதல்வர் ரங்கசாமி:
தேர்தல் வாக்குறுதிகளையும், சட்டசபையில் அளித்த வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றியுள்ளோம். மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அரசு செயல்பட்டுள்ளது. மக்களுக்கு மகிழ்ச்சியை தரும் அரசாக இந்த அரசு அமைந்துள்ளது.
நிர்வாகத்தில் சில சங்கடங்கள் தொடர்கிறது. அந்த சங்கடங்கள் தீர மாநில அந்தஸ்து அவசியம் வேண்டும். இதுகுறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். 1991ம் ஆண்டு முதல் சட்டசபையில் உள்ளேன். தொடர்ந்து பல கவர்னர்களை பார்த்துள்ளேன்.
ஆனால் தற்போது நிலை மாறியுள்ளது.கவர்னர் கடந்த காலங்களில் இருந்தது போல் இல்லாமல் தனக்குத்தான் அதிகாரம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ., க்களுக்கு அதிகாரம் தேவை. இதனால் மாநில அந்தஸ்தை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்கும் என நம்புகிறேன்.
மாநில அந்தஸ்திற்காக தீர்மானம் நிறைவேற்றியோ அல்லது சில நேரங்களில் போராட்டங்கள் நடத்தி கூட பெறப்பட்டுள்ளது. கோவாவில் மக்கள் தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று போராடியதன் மூலம் அவர்களுக்கு மாநில அந்தஸ்து தரப்பட்டு இருக்கின்றது.
டில்லியை காரணம் காட்டி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர மறுக்கப்பட்டு வந்தது.இந்த நிர்வாக சங்கடங்களிலும் அனைத்து தொகுதிகளுக்கு ஆளும் கட்சி, எதிர்கட்சி, சுயேச்சை என எந்த பாகுபாடு இல்லாமல் சரிசமமான நிதியை கொடுத்து மாநில வளர்ச்சியை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
மக்கள் விரும்பிய நிறைவான அரசாக எனது அரசு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. மாநில அந்தஸ்திற்காக தேர்தலை புறக்கணிக்கலாம் என எதிர்கட்சிகள் கூறியுள்ளன.
மீண்டும் தீர்மானம் நிறைவேற்றவும், டில்லி சென்று பிரதமரை சந்திக்கவும் அல்லது தொடர்ந்து போராடவும், தேர்தலை புறக்கணிக்கவும் கூட நான் தயாராகவே இருக்கிறேன். என்.ஆர்.காங்., கட்சியும் தயாராகவே இருக்கின்றது. நீங்கள் தயாரா.
மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்புவோம். அனைவரும் ஒன்றுபட்ட முடிவை சொல்லுங்கள்.
நாஜிம் (தி.மு.க.,): ஆட்சியின் நிறைவில் இருக்கிறோம். ஆனால் யாருக்கும் மன நிறைவு இல்லை. மாநில அந்தஸ்திற்காக முதல்வர் தேர்தலை புறக்கணிக்க தயார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
எதிர்கட்சித்தலைவர் சிவா: ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து தேர்தலை புறக்கணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து பேசி முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு மாநில அந்தஸ்திற்காக தேர்தல் புறக்கணிப்புவிவாதம் அனல் பறந்தது.

