ADDED : நவ 14, 2026 06:18 PM

புதுச்சேரி: புதுச்சேரி, மகாத்மா காந்தி சாலையில் அமைந்துள்ள பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நேற்று நடந்தது.
பள்ளி முதல்வர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சின்னப்பன் முன்னிலை வகித்தார். விழாவில், விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ., பங்கேற்று, இந்தாண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்று, பல்வேறு மருத்துவக் கல்லுாரிகளில் மருத்துவ இடங்களைப் பெற்ற 30 மாணவர்களுக்கு சால்வை அணிவித்து, ஸ்டெதஸ்கோப் வழங்கினார்.
மேலும், எழுத்தாளர் தமிழ்மலன், பள்ளியில் சிறந்த நுால்களை எழுதி வெளியிட்ட மாணவர்களுக்கு ‘இளம் எழுத்தாளர் பெத்தி’ என்ற சிறப்பு பட்டம் வழங்கி கவுரவித்தார்.
விழாவில், பள்ளியின் முன்னாள் மாணவரும், வளர்ந்து வரும் இசையமைப்பாளருமான நிர்மல் ஜே.பி. கவுரவிக்கப்பட்டார். இவர் இசையமைத்துள்ள ‘ஃபேமிலி பாய்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதேபோல், உப்பளம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் எல்.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான “பெத்தி குழந்தைகள் தின கார்னிவல் 2026’யை வில்லியனுார் துாாய லுார்து அன்னை ஆலய அருட்தந்தை ஆல்பர்ட் விக்டர் துவங்கி வைத்தார். இதில், மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
