பருவமழை முன்னெச்சரிக்கை :கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு
பருவமழை முன்னெச்சரிக்கை :கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு
ADDED : அக் 17, 2026 09:23 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, கலெக்டர் குலோத்துங்கன், தாழ்வான பகுதிகளை ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலெக்டர் குலோத்துங்கன் நேற்று புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
பாகூர் அடுத்த கொம்மந்தான்மேடு, ஆராய்ச்சிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் ஆய்வு செய்தார்.
அப்போது, தென்பெண்ணையாற்றின் வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்த அவர், வாய்க்கால் துார்வாரும் பணிகளை ஒரு வாரத்திற்குள் முடிக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து, கிருமாம்பாக்கம் ஏரியில் பைபர் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் குறித்து ஆய்வு செய்த அவர், உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
உப்பனாறு வாய்க்கால் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர், கழிவுநீர் மற்றும் மழை நீர் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லாத வண்ணம், பணிகளை துரிதப்படுத்திட உத்தரவிட்டார்.
கிருஷ்ணா நகர், உருளையன்பேட்டை ஜெ.வி.எஸ். நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலமாக வெளியேற்றும் பணியை துரிதப்படுத்திடவும், பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர், தடையில்லா மின்சாரம் வழங்கிட அறிவுறுத்தினார்.
மழைக் காலங்களில் முதியோர்கள் மற்றும் குழந்தைகள் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார். ஆய்வின்போது, உள்ளாட்சித் துறை இயக்குனர் ஆதர்ஷ், பாகூர் தாசில்தார் ராஜலட்சுமி, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
