ADDED : நவ 28, 2026 10:38 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கிய கல்லுாரி மாணவர்களை கடலோர காவல்படையினர், லைப் கார்டு மீட்டனர்.
தெலுங்கானா மாநிலம், மிட்ஜில் மகபூப்நகர் பகுதியை சேர்ந்தவர் யசோதர், 19; அங்குள்ள தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் ராகேஷ், சிவா, லோகேஷ், சுஷாந்த், ஜரீத், ஷாகேஷ் ஆகியோருடன் இன்று (நவ.,28) புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார்.
அவர்கள், இன்று மாலை புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரே கடற்கரைக்கு வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கடலோர காவல்படை மற்றும் லைப் கார்டு ஆகியோர் கடலில் குளிக்கக் கூடாது என எச்சரித்தும், தடை மீறி கடலில் இறங்கி குளித்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக 6 பேர் கடல் அலையில் சிக்கி, நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைகண்ட பாதுகாப்பில் இருந்த கடலோர காவல் படை மற்றும் லைப் கார்டு ரமேஷ், ஜெயக்குமார் ஆகியோர் உடனடியாக கடலில் இறங்கி கயிறு உதவியுடன் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
அதில், யசோதர் ஆபத்தான நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின், நலமடைந்து திரும்பினார்.
