காங்., வேட்பாளர் ஆதரித்து மாநில தலைவர் ஓட்டு சேகரிப்பு
காங்., வேட்பாளர் ஆதரித்து மாநில தலைவர் ஓட்டு சேகரிப்பு
ADDED : செப் 26, 2026 11:44 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் காங்., சார்பில் போட்டியிடும் விநாயகத்தை ஆதரித்து மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., நேரு எம்.எல்.ஏ., ஆகியோர் பாக்முடையான்பேட், தாகூர் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர்.
அப்போது, காங்., வேட்பாளர் விநாயகம் பேசுகையில், ‘நான் கடந்த தேர்தலில் இருந்து தட்டாஞ்சாவடி தொகுதியில் பல்வேறு மக்கள் நல பணிகள் செய்து வருகிறேன்.
தொகுதியில் எங்காவது மின்தடை, குடிநீர் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், வீதிகளில் பாதாள கழிவு நீர் பிரச்னைகள் என்று ஓடோடி வந்து நின்று சரி செய்து வருகிறேன். பேரிடர் காலங்களில் தட்டாஞ்சாவடி தொகுதி மக்களுக்காக துணை நின்றேன்.
இப்போது உங்களை நாடி ஒட்டு கேட்டு வருபவர்கள் அப்போதெல்லாம் யாரும் வரவில்லை. சொகுசு அறைகளில் சொகுசாக இருந்தார்கள். மக்களே சிந்தியுங்கள், தட்டாஞ்சாவடி தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை தேவைகளான சிமென்ட் சாலை, பாதாள கழிவுநீர் இணைப்புகள், சுத்தமான குடிநீர், மின்தடை இல்லாத பகுதியாக உருவாக்க தட்டாஞ்சாவடி தொகுதி முழுதும் புதிய மின்மாற்றிகள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டிய டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டதில் நானும் ஒருவன். தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில், பணம் வேண்டுமா உங்களுக்காக உழைக்க கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் நான் வேண்டுமா. கை சின்னத்திற்கு ஓட்டுபோட்டு பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார். ஓட்டு சேகரிப்பின் போது மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் ஓட்டு சேகரித்தனர்.
