நோணாங்குப்பம் ஆற்றுப்பாலத்தில் தடுப்புகள் அமைக்கும் பணி
நோணாங்குப்பம் ஆற்றுப்பாலத்தில் தடுப்புகள் அமைக்கும் பணி
ADDED : செப் 15, 2026 07:52 PM

அரியாங்குப்பம்: நோணாங்குப்பம் ஆற்றுப்பாலத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் இரும்பு பைப்புகளால் தடுப்புகள் அமைக்கும் பணி துவங்கியது.
புதுச்சேரி – கடலுார் சாலையை இணைக்கும் பாலமாக நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு உள்ளது. பிரான்ஸ் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலம் உறுதியாக உள்ளது. ஆனால், குறுகியதாக இருந்ததால் அதன் அருகில் புதிய பாலம் கட்டப்பட்டது.
புதிய பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு கட்டை 3 அடி உயரத்தில் இருக்கிறது. இதனால் பாலத்தின் ஏற்படும் விபத்தின் போது, வாகன ஓட்டிகள் பாலத்தில் இருந்து தண்ணீரில் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. ஓராண்டுக்கு முன், கார் மோதி பைக்கில் சென்றவர் பாலத்தின் இருந்து கீழே விழுந்து இறந்தார்.
அதேபோல், பைக்கில் சென்ற தம்பதி பாலத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதனால், பாலத்தின் இரு புறமும் தடுப்பு அமைக்க பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதையெடுத்து, பாலத்தின் பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்க பொதுப்பணித்துறை சார்பில், 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த பணிகள் துவக்க கடந்த 7 மாதத்திற்கு முன், அப்போதைய சபாநாயகர் செல்வம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூஜை போட்டனர். இதன் இடையில், சட்டசபை தேர்தல் நடந்ததை அடுத்து பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், பாலத்தில் இரு பக்கவாட்டு பகுதியில் 3 அடி உயரத்தில், 480 மீட்டர் நீளத்தில் இரும்பு பைப்புகள் மூலம் அமைக்கும் பணியை, பொதுப்பணித்துறையினர் நேற்று துவக்கினர். பணி முடியும் வரை பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பழைய பாலத்தின் வழியாக வாகனங்களை ஒரு வழிபாதையாக மாற்றிவிட போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
