ADDED : நவ 20, 2024 04:49 AM
புதுச்சேரி : சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் உழவர்கரை நகராட்சி மூலம் பிடிக்கப்பட்டு, உரிமையாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சாலைகளில் திரியும் மாடுகளால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு விபத்து அதிகரித்து வருகிறது.
இதனால், மாடுகள் வளர்ப்போர் தங்களது மாடுகளை சாலைகள் மற்றும் பொது இடங்களில் திரிய விட வேண்டாம்.தவறினால் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது.
அதனை பொருட்படுத்தாமல் சாலையில் சுற்றி திரிந்த 108 மாடுகள் இதுவரை பிடிக்கப்பட்டு, உரிமையாளர்களிடமிருந்து ரூ. 2 லட்சத்து61 ஆயிரத்து 420 அபராதம் வசூலிக்கப்பட்டு, மாடுகளை இனி சாலையில் திரிய விடமாட்டோம் என உறுதி மொழி பெறப்பட்டது.
இருப்பினும், மாடுகள் தொடர்ந்து சாலைகளில் சுற்றி திரிவதாக பொதுமக்கள் மூலம் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. ஆகையால், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வரும் வாரத்தில் உழவர்கரை நகராட்சி சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. அதன்படி, நகராட்சியால்பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர் மீது போலீசில் புகார் அளிப்பதோடு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும்.
எனவே, மாட்டின் உரிமையாளர்கள் தங்களின் மாடுகளை சாலையில் திரியவிடாமல், தங்களுக்கு சொந்தமான இடத்தில் சுகாதாரமான முறையில் வளர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.