/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீபாவளி பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
/
தீபாவளி பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
ADDED : அக் 31, 2024 05:53 AM

புதுச்சேரி: தீபாவளி பண்டிகைக்கான பொருட்கள் வாங்க புதுச்சேரி நகர வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகையொட்டி, புதுச்சேரி கடை வீதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே விற்பனை சூடுபிடிக்க துவங்கி விட்டது. நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலைகளில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நேற்று முன்தினம் மற்றும் நேற்று இரு நாட்களில் நேரு வீதி, காந்தி வீதி மட்டும் இன்றி கொசக்கடை வீதி, ரங்கப்பிள்ளை வீதி, மிஷன் வீதி உள்ளிட்ட நகர வீதிகள் அனைத்தும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெரியக்கடை போலீசார் கண்காணிப்பு கோபுரம் மற்றும் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு புதுச்சேரி அரசு கான்பெட் மூலம் ரூ.1,000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் ரூ.500க்கு மானிய விலையில் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், மானிய விலை பொருட்கள் வழங்குவதற்கு எந்த தனியார் நிறுவனம் டெண்டர் எடுக்கவில்லை.
இதனால் மானிய விலை பொருட்கள் நேற்று வரை யாருக்கும் வழங்கப்படவில்லை. மானிய விலை பொருட்கள் கிடைக்காது என்பதை அறிந்த பொதுமக்கள் மளிகை கடைகள், ஆயில் நிறுவனங்களில் எண்ணெய் வாங்க அதிக அளவில் குவிந்தனர்.
சிறு கடைகளில் கூட்டம் இல்லை
சண்டே மார்க்கெட்டில் கடை வைத்துள்ள சிறு வியாபாரிகள் கூறுகையில்: அதிக முதலீடு செய்து பொருட்கள் வாங்கி வந்தாலும் பெரிய அளவில் விற்பனை இல்லை.
பலர் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதும், பெரிய நிறுவனங்கள் இலவச சலுகைகள் அறிவித்துவிடுவதால் சிறு கடைகள் பக்கம் மக்கள் வருகை குறைவாக உள்ளது என கூறினர்.

