/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு ஊழியர்கள் விவரங்களை சமர்ப்பிக்க சார்பு செயலர் அதிரடி உத்தரவு
/
அரசு ஊழியர்கள் விவரங்களை சமர்ப்பிக்க சார்பு செயலர் அதிரடி உத்தரவு
அரசு ஊழியர்கள் விவரங்களை சமர்ப்பிக்க சார்பு செயலர் அதிரடி உத்தரவு
அரசு ஊழியர்கள் விவரங்களை சமர்ப்பிக்க சார்பு செயலர் அதிரடி உத்தரவு
ADDED : ஜன 01, 2025 05:16 AM
புதுச்சேரி : சர்வீஸ் பிளேஸ்மென்ட் அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களின் விவரங்களை சமர்ப்பிக்க அனைத்து துறைகளுக்கும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை உத்தரவிட்டுள்ளதால், ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் அரசு அலுவலகங்களில் சர்வீஸ் பிளேஸ்மென்ட் அடிப்படையில் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பணியாற்றி வருகின்றனர். இதனால் அரசு துறைகளில் பணிகள் பாதிக்கப்படுவதுடன் மற்ற ஊழியர்களுக்கு பணிச்சுமையும் ஏற்படுகிறது.
இதுதொடர்பான புகார்களின் பேரில், பணி ஒதுக்கப்பட்ட இடத்திற்கு பதிலாக வேறு இடங்களில் சர்வீஸ் பிளேஸ்மென்ட்டில் பணிபுரிவோர் விவரங்களை கவர்னர் கேட்டுள்ளார்.
அதன் பேரில் சர்வீஸ் பிளேஸ்மென்டில் பணிபுரியும் ஊழியர்களின் விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் அனைத்து துறை தலைவர்கள், கலெக்டர்கள், மண்டல அதிகாரிகள், தன்னாட்சி அமைப்புகள், கார்பரேஷன்கள், சொசைட்டிகள், அரசு சார்பு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
பிற துறைகளில் சர்வீஸ் பிளேஸ்மென்ட் அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களின் விவரங்கள் கவர்னருக்கு வழங்க வேண்டும்.
எனவே அனைத்து துறை தலைவர்களும், தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் தினக்கூலி, என்.எம்.ஆர். உட்பட அனைத்து அரசு ஊழியர்களின், சர்வீஸ் பிளேஸ்மென்ட்டில் பிற துறைகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் விவரங்களை ஜன., 10ம் தேதிக்குள் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பாக, சர்வீஸ் பிளேஸ்மென்டில் பணிபுரியும் ஊழியர் பெயர், பதவி, எந்த தேதியில் இருந்து எங்கு பணி புரிகிறார் என்பது குறித்த விவரங்களை துணை அலுவலகங்களில், துறை தலைவர்கள் சேகரித்து, ஒருங்கிணைந்த பதிலை அளிக்க வேண்டும்.
இந்த விவரங்களை 'dpar-ccd@py.gov.in' என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதில் நேர வரம்பு கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை பெற்று, அதனை கவர்னருக்கு அனுப்பி வைக்கும். அதன் பிறகு, சர்வீஸ் பிளேஸ்மென்ட் அடிப்படையில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் குறித்து கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என தெரிகிறது.