குப்பை சேகரிப்பில் டிஜிட்டல் கண்காணிப்பு திட்டம்: 1.97 லட்சம் வீடுகளில் கியூ.ஆர்., குறியீடு ஸ்டிக்கர்
குப்பை சேகரிப்பில் டிஜிட்டல் கண்காணிப்பு திட்டம்: 1.97 லட்சம் வீடுகளில் கியூ.ஆர்., குறியீடு ஸ்டிக்கர்
UPDATED : அக் 11, 2026 06:52 PM
ADDED : அக் 11, 2026 06:06 PM

புதுச்சேரி: வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணியை ஆன்லைனில் கண்காணிக்கும் திட்டம் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட உள்ளது.
புதுச்சேரியில் தினமும் 450 டன் குப்பைகள் உற்பத்தியாகின்றன. இவற்றை முறையாக அகற்றுவதற்காக, கிரீன் வாரியர் துப்புரவுப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரித்து வருகின்றனர்.
இருப்பினும், துப்புரவுப் பணியாளர்கள் முறையாக வீடுகளுக்கு வந்து குப்பைகளைச் சேகரிக்கின்றனரா என்பதை கண்காணிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. குறிப்பிட்ட நேரத்தில் துப்புரவுப் பணியாளர்கள் வருவதில்லை; அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்பதும் தெரிவதில்லை எனப் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதற்குத் தீர்வு காணும் வகையில், வீடுகளில் குப்பை சேகரிக்கும் பணியைத் தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிப் பகுதிகளில் உள்ள 1,97,395 வீடுகளில் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட உள்ளன. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
இந்த ஸ்டிக்கரில் சம்பந்தப்பட்ட வார்டு, தெரு, வீட்டு எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் குப்பை சேகரிக்கச் செல்லும் துப்புரவுப் பணியாளர்கள், அங்குள்ள ஸ்டிக்கரில் இடம்பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டைத் தங்களது கருவி மூலம் ஸ்கேன் செய்து, குப்பைகளைப் பெற்ற விவரத்தை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
இதன் மூலம் எந்தெந்த வீடுகளில் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன, எந்தெந்த வீடுகளுக்குத் துப்புரவுப் பணியாளர்கள் சென்றுள்ளனர் என்பதைக் கண்காணிக்க முடியும்.
புகார் தெரிவிக்கலாம்:: கியூ.ஆர். குறியீடு ஸ்டிக்கரில் புகார் தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்ணும் இடம்பெற்றிருக்கும். குறிப்பிட்ட வீட்டுக்குக் குப்பை சேகரிக்கத் துப்புரவுப் பணியாளர்கள் வராவிட்டால், பொதுமக்கள் அந்த எண்ணைத் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட துப்புரவுப் பணியாளர்களுக்கு உடனடியாகக் குப்பைகளைச் சேகரிக்க உத்தரவிடும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் ஆய்வு: குப்பை சேகரிப்புப் பணிகள் முறையாக நடைபெறுகின்றனவா என்பதைக் கண்காணிக்கத் தனியார் நிறுவனம் ஒன்றும் இத்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட உள்ளது. துப்புரவுப் பணியாளர்கள் தங்களது பணியைச் சரியாக மேற்கொள்கின்றனரா, வீடுகளுக்குச் சென்று குப்பைகளைச் சேகரிக்கின்றனரா என்பது குறித்து அந்த நிறுவனம் கள ஆய்வு மேற்கொள்ளும்.
அதன் அடிப்படையில், கிரீன் வாரியர் நிறுவனம் மற்றும் உள்ளாட்சித் துறைக்கு நாள்தோறும் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இதன் மூலம் குப்பை சேகரிப்புப் பணியில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அவற்றை உடனுக்குடன் சரிசெய்ய முடியும்.
கிராமங்களுக்கும் வருமா?
இத் திட்டம் புதுச்சேரி நகராட்சியில் 88,596 வீடுகளிலும், உழவர்கரை நகராட்சியில் 1,08,799 வீடுகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இரு நகராட்சிகளையும் சேர்த்து மொத்தம் 1,97,395 வீடுகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன.
நகராட்சிப் பகுதிகளில் குப்பை சேகரிப்பைக் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியின் கிராமப்புறப் பகுதிகளிலும் இதை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளில் மட்டும் 96,742 வீடுகள் உள்ளன.
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தில் 17,646 வீடுகளும், பாகூரில் 16,274 வீடுகளும், நெட்டப்பாக்கத்தில் 12,438 வீடுகளும், மண்ணாடிப்பட்டில் 20,245 வீடுகளும், வில்லியனூரில் 30,139 வீடுகளும் உள்ளன.
எனவேல, நகராட்சிப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்படும் இத்திட்டம், கிராமப்புறங்களுக்கும் விரிவுபடுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
குப்பைகளை முறையாக அகற்றுவதுடன், துப்புரவுப் பணியாளர்களின் வருகையையும் உறுதிப்படுத்தும் வகையில், அனைத்துப் பகுதிகளுக்கும் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
