தினமலர் செய்தி எதிரொலி வாஜ்பாய் பெயர் பலகை... மீண்டும் உச்சிக்கு போனது
தினமலர் செய்தி எதிரொலி வாஜ்பாய் பெயர் பலகை... மீண்டும் உச்சிக்கு போனது
UPDATED : அக் 21, 2026 07:11 PM
ADDED : அக் 21, 2026 07:09 PM

புதுச்சேரி: தினமலர் செய்தி எதிரொலியால் லாஸ்பேட்டை பல்நோக்கு அரங்கில் வாசலில் ஓரம்கட்டப்பட்டு இருந்த வாஜ்பாய் பெயர் பலகை மீண்டும் பொருத்தப்பட்டது.
புதுச்சேரியின் விளையாட்டு வரைபடத்தில் ஒரு மகுடம் போல கம்பீரமாக நிற்கிறது லாஸ்பேட்டை பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம். 2018-ல் திறக்கப்பட்ட இந்த அரங்கம், ஹெலிபேட் அருகில் 7 கோடி ரூபாய் செலவில் எழுந்து நின்றது.
கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, ஷட்டில் பேட்மிட்டன் என அனைத்து விதமான இன்டோர் விளையாட்டுகளுக்கும் சர்வதேச தரத்திலான வசதிகளுடன் ஜொலிக்கிறது இந்த அரங்கம். இதில் மத்திய அரசு 6 கோடி ரூபாயும், புதுச்சேரி அரசு 1 கோடி ரூபாயும் பங்களிப்பை வழங்கி உருவாக்கியது.
இந்த பிரம்மாண்ட அரங்கத்திற்கு நாட்டின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டது. பெயருக்குத் தகுந்த மாதிரி பளபளக்கும் அழகான பெயர் பலகையும் தயாரானது. ஆனால், அரங்கத்தின் முகப்பில் கெத்தாகத் தொங்க வேண்டிய அந்தப் பெயர் பலகை, சில மாதங்களாக வாசலின் ஓரத்தில் அனாதையாகக் கிடந்தது.
இதைப் பார்த்த புதுச்சேரி பா.ஜ.வினர், எங்கள் தலைவரின் பெயரை இப்படி ஓரம் கட்டுவதா என, கொந்தளித்து நின்றனர். இது குறித்து தினமலர் நாளிதழ் விளையாட்டுப் பக்கத்தில் செய்தி வெளியானது.
இதன் விளைவாக, நீண்ட நாட்களாக வாசலோரத்தில் கிடந்த வாஜ்பாயின் பெயர் பலகை, தற்போது பல்நோக்கு அரங்கின் உச்சியில் கம்பீரமாக மாட்டி வைக்கப்பட்டுள்ளது. ஒருவழியாகப் வாஜ்பாய் பெயர் பலகைக்குரிய மரியாதை கிடைத்துவிட்ட நிம்மதியில் இருக்கிறார்கள் தாமரை தொண்டர்கள்.
