/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சமுதாயத்தின் மிகப்பெரிய பிரச்னையாக மாறிய போதை பழக்கம்: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் வேதனை
/
சமுதாயத்தின் மிகப்பெரிய பிரச்னையாக மாறிய போதை பழக்கம்: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் வேதனை
சமுதாயத்தின் மிகப்பெரிய பிரச்னையாக மாறிய போதை பழக்கம்: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் வேதனை
சமுதாயத்தின் மிகப்பெரிய பிரச்னையாக மாறிய போதை பழக்கம்: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் வேதனை
UPDATED : டிச 29, 2025 10:15 PM
ADDED : டிச 29, 2025 10:13 PM

புதுச்சேரி : போட்டிகளில் வெற்றி பெற குறுக்கு வழியை பின்பற்றினால், அந்த வெற்றி நிலைக்காது என புதுச்சேரி பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
கல்விக் கொள்கை
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த 30வது பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கிய துணை ஜனாதிபதியும், பல்கலை வேந்தருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: புதுச்சேரி பல்கலைக்கழகம் தற்போது 'ஏ பிளஸ்' தகுதிப் பெற்றுள்ளது. சர்வதேச, தேசிய அளவில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலகில் உள்ள 2 சதம் உயர் விஞ்ஞானிகளின் பட்டியலில், இங்கு பணியாற்றும் பேராசிரியர்களில் 28 பேர் உள்ளனர் என ஸ்டான்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.
மாணவர்கள்தான் எதிர்காலத்தில் நாட்டை கட்டமைப்பவர்கள். ஆசிரியர்களாக, கலைஞர்களாக எந்த பணியாற்றினாலும் அதில் மிக சிறப்பான பங்களிப்பை நாட்டுக்கு அளிக்க வேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தேசிய கல்விக் கொள்கை -2025 வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்வை மட்டும் மையப்படுத்துவதாக இல்லாமல் ஒட்டுமொத்த விரிவான மாணவர்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமை
கல்வியில் டிஜிட்டல், தீஷா, டிஜிட்டல் நூலகம் உள்ளிட்ட சொத்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் கல்வி அடிப்படை உரிமையாக இருக்கிறது. 5 ஆண்டிற்கு முன் இருந்த தொழில்நுட்பம் இப்போது இல்லை. தற்போதுள்ள தொழில்நுட்பம் எதிர்காலத்திலும் இருக்காது. அதனால் தொழில்நுட்பம் மறுஉருவாக்கம் பெற்றுக் கொண்டே இருக்கிறது.
அவசியம்
மேலும், கல்வியில் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன், பயோடெக்னாஜி உள்ளிட்ட துறைகள் மறுகட்டமைப்பை நோக்கிச் செல்கின்றன. அதனால் கல்வியில் உற்சாகத்தோடும் விழிப்புணர்வோடும் தொழில்நுட்பத்தை தத்தெடுக்க வேண்டும். 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதத்தை நோக்கி பிரதமர் மோடி பயணத்தை தொடங்கியுள்ளார். அதற்கு இன்னும் 22 ஆண்டுகள் இருப்பதாகக் கருத வேண்டாம். இலக்கை அடைய அனைவரும் இப்போதே பணியைத் தொடங்க வேண்டும். அதற்காக அனைத்துத் தரப்பு சமுதாயத்தையும் உள்ளடக்கிய சமுதாய முன்னேற்றம் ஏற்பட வேண்டியது அவசியம்.
உயர்த்தும் சக்தி
வாழ்க்கை சவால்கள் நிரம்பியது. போட்டி இல்லாத உலகம் என்றைக்கும் இருந்ததாக சரித்திரம் இல்லை.
போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக குறுக்குவழிகளை ஒருபோதும் கடைபிடிக்கக்கூடாது. அது ஏதோ வெற்றியை தருவது போல் தோற்றத்தை தரும். ஆனால், ஒட்டுமொத்த தோல்வியை ஒருநாள் தந்து விடும்.
வெற்றி

நேரம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. கடவுளே இந்த மண்ணில் வந்து அவதரித்தாலும், அவருக்கும் 24 மணி நேரம்தான். அந்த நேரத்தை எப்படி ஒதுக்குகிறோம், எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான் நம்முடைய உயர்வு இருக்கிறது. அதை சரியாக செய்வது நம்முடைய கடமை.
பள்ளியில் படிக்கும்போது கால அட்டவணையை பின்பற்றி இருப்போம். அதுபோல் வாழ்க்கைக்கும் கால அட்டவணை தேவை. நேரத்தை சரியாக கடைபிடிப்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

