/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிராபிக் பிரச்னையால் சுற்றுலா பயணிகளின் வருகை... குறைகிறது; புதுச்சேரியின் நிதி ஆதாரம் கேள்விக்குறியாகும் அபாயம்
/
டிராபிக் பிரச்னையால் சுற்றுலா பயணிகளின் வருகை... குறைகிறது; புதுச்சேரியின் நிதி ஆதாரம் கேள்விக்குறியாகும் அபாயம்
டிராபிக் பிரச்னையால் சுற்றுலா பயணிகளின் வருகை... குறைகிறது; புதுச்சேரியின் நிதி ஆதாரம் கேள்விக்குறியாகும் அபாயம்
டிராபிக் பிரச்னையால் சுற்றுலா பயணிகளின் வருகை... குறைகிறது; புதுச்சேரியின் நிதி ஆதாரம் கேள்விக்குறியாகும் அபாயம்
ADDED : செப் 25, 2024 05:06 AM

புதுச்சேரி: புதுச்சேரியின் நிதி ஆதாரமாக விளங்கும் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் குறைவதற்கு பிரதான காரணமான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அரசு பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
புதுச்சேரியில் சொல்லி கொள்ளும் அளவில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை. இருந்த 3 பஞ்சாலைகள், சர்க்கரை ஆலைகள் மற்றும் தனியார் பெரிய ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டது. இதனால் மாநிலத்தின் வருவாய், கலால் மற்றும் சுற்றுலாவை நம்பியே உள்ளது.
அழகிய புதுச்சேரி கடற்கரை மற்றும் பிரெஞ்சு கட்டட கலை அழகை ரசிக்கவும், விதவிதமான மதுபானங்களை குடித்து மகிழ நாட்டின் பல மாநிலத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் வருகையால் மதுபான விற்பனை, ஓட்டல்கள், சிறிய பெரிய கடைகளில் வியாபாரம் நடந்து வருகிறது. சமீப காலமாக வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைய துவங்கி உள்ளது. பல ஓட்டல்களில் வார இறுதி நாட்கள் கூட அறைகள் நிரம்புவது இல்லை.
போக்குவரத்து நெரிசல்
புதுச்சேரியின் அழகை ரசித்து கொண்டு, மகிழ்ச்சியாக உலா வரலாம் என்ற எண்ணத்துடன் வரும் சுற்றுலா பயணிகள், புதுச்சேரியில் 2 நாட்கள் தங்கி விட்டு புறப்படும்போது, 'ஏன் புதுச்சேரி வந்தோம். இனி புதுச்சேரி பக்கமே வரக் கூடாது' என்ற எண்ணம் வந்து விடுகிறது. அந்த அளவுக்கு போக்குவரத்து பிரச்னை சுற்றுலா பயணிகளை பெரும் மன உலைச்சலுக்கு ஆளாக்கி விடுகிறது.
ஆக்கிரமிப்பால் அவதி
பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் நடைபாதைகளை ஏற்கனவே ஆக்கிரமித்து கடைகள் அமைத்து விட்டனர். தற்போது அதையும் தாண்டி அனைத்து சாலைகளின் இருபுறமும் 3 அடி முதல் 5 அடிவரை கடையின் பொருட்களை அடுக்கி வைத்து வியாபாரிகள் ஆக்கிரமித்து கொள்கின்றனர். இதனால் 40 அடி சாலையில் இரு பக்கமும் ஆக்கிரமிப்பு, வாகனங்களின் பார்க்கிங் போக மீதமுள்ள 20 அடி சாலையில், வாகனங்களும், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல வேண்டும்.
காந்தி வீதி, நேரு வீதி, மிஷன் வீதி, பாரதி வீதி, அண்ணா சாலை, புஸ்சி வீதி, ரங்கப்பிள்ளை வீதி, செட்டி தெரு, செஞ்சி சாலை, ஆம்பூர் சாலை என அனைத்து சாலைகளிலும் ஆக்கிரமிப்புகள் ஏராளமாக உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இன்றி அகற்ற வேண்டும்.
நகராட்சி கவனிக்குமா?
ஆம்பூர் சாலை, அம்பேத்கர் சாலை, கடலுார் சாலை, மறைமலையடிகள் சாலை உள்ளிட்ட பிரதான சாலையில் நிரந்தரமாக வாடகை வாகனங்கள், வேன், பஸ், லாரி, டெம்போக்களை அகற்ற வேண்டும்.
ஒருங்கிணைப்பு தேவை
நேரு வீதியில் பழைய சிறைச்சாலை இடத்தில் வணிக வளாகத்துடன் கூடிய 'மல்டி லெவல் கார் பார்க்கிங்' கட்ட ஸ்மார்ட் சிட்டி மூலம் திட்டமிடப்பட்டது. அதனை வியாபாரிகள் போர்வையில் சிலர் போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்தி விட்டனர். இதனால் நேரு வீதியில் வாகனங்கள் நிறுத்த இடமின்றி வாகனங்கள் நிரம்பி வழிகிறது. சில நேரம் இரண்டு பக்கமும் வாகனங்களை நிறுத்துகின்றனர்.
எனவே, நகர பகுதியில் சாலை மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றி, சாலையில் தாறுமாறாக நிறுத்தி போக்குவரத்து இடையூறு செய்யும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க புதுச்சேரி நகராட்சி, வருவாய்த்துறை மற்றும் போக்குவரத்து துறை கைகோர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு மற்றும் போக்குவரத்து பிரச்னைகள் இதே நிலை நீடித்தால், வரும் காலங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் முற்றிலுமாக குறைந்து விடும். வியாபார நிறுவனங்கள், ஓட்டல்கள் அனைத்தும் காற்று வாங்கும் நிலை ஏற்படும். இதனால், அரசு தற்போதே விழித்து கொண்டு, ஆக்கரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற முன்வரவேண்டும்.