/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புத்தகப்பை திட்டத்தை முடக்கும் கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்காமல் வீணடிப்பு
/
புத்தகப்பை திட்டத்தை முடக்கும் கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்காமல் வீணடிப்பு
புத்தகப்பை திட்டத்தை முடக்கும் கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்காமல் வீணடிப்பு
புத்தகப்பை திட்டத்தை முடக்கும் கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்காமல் வீணடிப்பு
ADDED : ஜன 07, 2026 05:28 AM

புதுச்சேரி: அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய புத்தகப் பை, கல்வி ஆண்டு முடியும் தருவாயிலும் வழங்கப்படாமல், பள்ளி அறைகளில் பூட்டி வைத்து பாழாக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி அரசு கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், நோட்டு, லேப் டாப், சைக்கிள்கள் இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை, பெல்ட் மற்றும் ஷூ இந்த கல்வி ஆண்டில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பள்ளிக் கல்வித்துறை சார்பில், 70 ஆயிரம் (எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு; 6-8 வகுப்பு, 9 மற்றம் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என நான்கு வகையான) புத்தகப் பையிற்கான டெண்டர் 'ஜெம் போர்ட்டலில்' வெளியிடப்பட்டது. இந்த டெண்டரை ரூ.35 லட்சத்திற்கு எடுத்த நிறுவனம், அரசு நிர்ணயித்த காலக் கெடுவான ஜூன் மாதமே புத்தகப் பைகளை அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கியது.
அதனை ஒரு சில பள்ளி தலைமை ஆசிரியர்கள், சீருடையுடன் சேர்த்தே புத்தகப்பைகளை மாணவர்களுக்கு வழங்கினர். அந்த புகைப்படத்தை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரி, புத்தகப்பை தரமில்லை. அதன் தரத்தை பரிசோதிக்க வேண்டியுள்ளதால், மறு உத்தரவு வரும் வரை மாணவர்களுக்கு வழங்க வேண்டாம் என வாய்மொழியாக உத்தரவிடப்பட்டது. அதனால், பிற தலைமை ஆசிரியர்கள், புத்தகப்பைகளை அறையில் போட்டு பூட்டினர்.
இதற்கிடையே, புத்தகப்பை தரத்தை பரிசோதிக்க, மத்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், அரசு டெண்டரில் குறிப்பிட்டுள்ள தரத்தில் புத்தகப் பை இருப்பதாக மத்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அறிக்கை அனுப்பியது. இந்த அறிக்கை பெற்று மூன்று மாதங்களுக்கு மேலாகியும், புத்தகப்பையை, மாணவர்களுக்கு வழங்காமல், காலம் கடத்தி வருகின்றனர். அடுத்த மாதம் முழு ஆண்டு தேர்வு துவங்க உள்ளது. இதற்கு மேல் புத்தகப் பை கொடுத்தாலும் அது மாணவர்களுக்கு பயன்பட போவதில்லை.
மாணவர்களின் நலனுக்காக ரூ.35 லட்சம் செலவில் வாங்கப்பட்ட புத்தகப்பைகள், கல்வித்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால், மாணவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்காமல் வீணடித்துள்ளனர்.
எந்த ஒரு அரசு திட்டமும் உரிய நேரத்தில் பயனாளியை சென்றடைந்தால்தான் அந்த திட்டம் வெற்றி பெறும். திட்டத்தால் அரசுக்கும் நற்பெயர் கிடைக்கும்.

