எலக்ட்ரிக் பஸ் டிரைவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
எலக்ட்ரிக் பஸ் டிரைவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 06:06 PM

புதுச்சேரி: பி.ஆர்.டி.சி., எலக்ட்ரிக் பஸ் டிரைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், நகர பகுதியில் பஸ் போக்குவரத்து பாதித்தது.
புதுச்சேரியில் 2 தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் பி.ஆர்.டி.சி., எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நகர பகுதியில் 25 பஸ்களும், மேட்டுப்பாளையத்தில் 20க்கும் மேற்பட்ட பஸ்களும் இயக்கப்படுகிறது.
இந்த பஸ்கள் ஒரு கி.மீ., இயக்குவதற்கு தனியார் நிறுவனத்திற்கு 65 ரூபாய் வீதம் அரசு வழங்குகிறது. பஸ்சில் ஏறும் பயணிகளிடம் வசூலிக்கும் டிக்கெட் கட்டணம் பி.ஆர்.டி.சி.,க்கு அளிக்கப்படும். பஸ் இயக்கும் பணியை ஒப்பந்த நிறுவனமும், டிக்கெட் வசூல் பணியை பி.ஆர்.டி.சி.,யும் பிரித்துக் கொள்கிறது.
இதற்கிடையே, கடந்த காலங்களில் சாலை விதிகளை மீறும் பஸ்களுக்கு, அதன் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். ஆனால், தற்போது பஸ் டிரைவர்கள் மீது அபராதம் விதிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பழைய பஸ் நிலையம் அருகே உள்ள நகர பகுதி எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கும் ஒப்பந்த நிறுவனத்தின் டிரைவர்கள், தங்களுக்கு 12 மணி நேர வேலைக்கு 700 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. ஒப்பந்தபடி மாதம் 21 ஆயிரத்து 700 ரூபாய் அளிக்கப்படும் எனக் கூறி 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது.
கடந்த 4 மாதங்களாக 2,500 ரூபாய் படி தொகையும் நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீஸ் விதிக்கும் அபராத தொகையை தங்களது சம்பளத்தில் பிடித்தம் செய்வதைக் கண்டித்து, நேற்று காலை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக நகர பகுதி பி.ஆர்.டி.சி., எலக்ட்ரிக் பஸ் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
