UPDATED : நவ 24, 2026 07:06 PM
ADDED : நவ 24, 2026 07:06 PM

புதுச்சேரி: இன்ஸ்டாகிராம் மூலம் பெண் போல பேசி பணம் பறித்த வாலிபரை டி நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சாரம், தென்றல் நகரை சேர்ந்தவர் சக்திவேல்,35; கார்பெண்டர். இவருடன் ஈரோட்டை சேர்ந்த சரவணன் என்பவர் வேலை செய்து வந்தார். இதனிடையே இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சக்திவேலுக்கு திருமணத்திற்கு பெண் தேடிக் கொண்டிருப்பதை அறிந்த சரவணன், அவரை பழிவாங்க நினைத்தார்.
இதையடுத்து சக்திவேலிடம் பெண் குரலில் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி வந்தார். தொடர்ச்சியாக நெருக்கமாக பேசிய பின் தான் ஐ.ஏ.எஸ்., படிக்க வேண்டும். அதற்கு பணம் தேவை படுவதாக சக்திவேலிடம் கூறினார்.
அதனையடுத்து, பல்வேறு ஜி பே கணக்குகளுக்கு சக்திவேல், ரூ.3 லட்சத்து 72 ஆயிரத்து 440 அனுப்பி உள்ளார். சிறிது நாள் கழித்து சந்தேகமடைந்த சக்திவேல் தான் பணம் அனுப்பிய எண்களுக்கு போன் செய்து விசாரித்தார். அப்போது தன்னிடம் பேசியது பெண் அல்ல, சரவணன் என தெரியவந்தது. இது குறித்து அவர் டி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து சரவணனை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
