UPDATED : நவ 24, 2026 04:30 PM
ADDED : நவ 24, 2026 04:30 PM

புதுச்சேரி: டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் குறித்து நேரு எம்.எல்.ஏ., அரசு பொது மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளரிடம் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மனித நேய மக்கள் சேவை இயக்க நிறுவன தலைவர் நேரு எம்.எல்.ஏ., புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரமேஷை சந்தித்து, டெங்கு காய்ச்சல் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, டெங்கு பாதிப்பு, தடுப்பு நடவடிக்கை, என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது, சிறப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், சிறப்பு படுக்கை வசதிகளை ஏற்படுத்தி சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆலோசனையின் போது, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் ஆத்மநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.
