ADDED : நவ 10, 2025 11:25 PM
புதுச்சேரி: பட்டா வழங்க கோரி, குழந்தைகளுடன் நரிக்குறவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதகடிப்பட்டு பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள், இலவச பட்டா வழங்க கோரி, முதல்வர் ரங்கசாமியை சந்திக்க நேற்று மதியம் 1:00 மணியளவில், வந்தனர். சட்டசபைக்குள் நுழைய முயன்ற போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, முதல்வர் இல்லை என கூறினர்.
அதனையெடுத்து, குழந்தைகளுடன் வந்த நரிக்குறவர்கள், சட்டசபை முன்பு, எங்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. தொடர்ந்து எங்களை புறக்கணிக்கின்றனர், ஒரு வாரத்தில் இலவச பட்டா வழங்குவதாகவும் முதல்வர் கூறினார். அதற்கான நடவடிக்கை எடுக்க வில்லை. முதல்வரை பார்க்க வந்தாலும், ஏதாவது காரணம் கூறி அனுப்பி விடுகிறார்கள். என கோஷமிட்டு, போராட்டம் செய்தனர்.
இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

