ADDED : ஏப் 17, 2026 05:57 PM

புதுச்சேரி: புதுச்சேரி இசைக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் நலச்சங்கம் மற்றும் பிம்ஸ் மருத்துவமனை ஆகியன இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தின.
வெங்கட்டா நகர், தமிழ் சங்கத்தில், புதுச்சேரி இசைக் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நலச்சங்கத்தின் தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார்.
பிம்ஸ் மருத்துவமனை மக்கள் தொடர்பு மேலாளர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். முகாமில், பிளிஸ்பிட் நிறுவனர் முத்துலட்சுமி சரவணன், தமிழ்ச்சங்கத் தலைவர் முத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினர்களாக எம்.டி.பி.ஜி.ஐ., முதல்வர் பிரமிளா தமிழ்வாணன், கலைமாமணி டாடா பானுமதி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
காலை 8:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடந்த முகாமில், பிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று, இசைக்கலைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பொது மருத்துவம், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்து, ஆலோசனை வழங்கினர்.
இதில் புதுச்சேரியைச் சேர்ந்த ஏராளமான இசைக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
