/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதலீடுகளை ஈர்க்க முழு நேர அமைப்பு தேவை! தமிழகத்தை பின்பற்றுமா புதுச்சேரி அரசு
/
முதலீடுகளை ஈர்க்க முழு நேர அமைப்பு தேவை! தமிழகத்தை பின்பற்றுமா புதுச்சேரி அரசு
முதலீடுகளை ஈர்க்க முழு நேர அமைப்பு தேவை! தமிழகத்தை பின்பற்றுமா புதுச்சேரி அரசு
முதலீடுகளை ஈர்க்க முழு நேர அமைப்பு தேவை! தமிழகத்தை பின்பற்றுமா புதுச்சேரி அரசு
ADDED : நவ 06, 2025 05:27 AM

புதுச்சேரி: முதலீடுகளை ஈர்க்க தமிழகத்தை போன்று புதுச்சேரி மாநிலத்திற்கு முழு நேர தொழில் வழி அமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என, தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 77 பெரிய தொழிற்சாலைகள், 191 நடுத்தர தொழிற்சாலைகள், 7,872 சிறுதொழிற்சாலைகள், 1,157 குறு தொழிற்சாலைகள் என, மொத்தம் 9,307 தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 15,873 கோடி அளவிற்கு ஆண்டிற்கு உற்பத்தி நடந்து வருகிறது.
மாநிலத்தில் மேலும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளை கொண்டு வந்து படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக புதுச்சேரி மாநிலத்தில் தொழில் துவங்குவதற்கான நடைமுறைகளை அரசு எளிமைப்படுத்தியுள்ளது.
இருப்பினும், தொழில் முதலீடுகள் தான் இன்னும் வந்தபாடியில்லை. இத்தனைக்கும் பல நாடுகளில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் பெரிய பன்னாட்டு கம்பெனிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்துகின்றன. அத்துடன், அப்படியே கிடப்பில்போடப்பட்டு காலங்களும் கடந்துபோய் விடுகின்றன.
இந்த விவகாரத்தில் தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என தொழில் துறையினர் எதிர்பாக்கின்றனர்.
இது குறித்து தொழில் துறையினர் கூறியதாவது:
தமிழகத்தில் இன்வென்ஸ்மென்ட் கைடன்ஸ் பெயரில் தனி அமைப்பு செயல்படுகின்றது. இந்த அமைப்பில் முழு நேரமாகவே தொழில் வழிகாட்டி ஆலோசகர்களாக படித்த இளைஞர்கள் பணியில் அமர்த்தப்பட்டுளனர். கோட் சூட்டுடன் இவர்கள் பல்வேறு நாடு, மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு நேரில் செல்கின்றனர். தொழில் ஆரம்பிப்பதற்கான சூழல், சலுகை, திட்டங்கள், மானியங்கள், ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் அனைத்தையும் விரல்நுனியில் வைத்துள்ள இவர்கள், அந்நிறுவனங்களை உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுகின்றனர்.
அனைத்தையும் கூறி தமிழகத்தில் தொழில் துவங்க அழைப்பு விடுகின்றனர். சந்திப்பில் சாதகமான பதில் கிடைத்த உடனே மற்ற வேலைகளை தமிழக அரசிடன் ஒப்படைத்து விடுகின்றனர்.
அடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தம், இடம் ஒதுக்கீடு என பல்வேறு விஷயங்கள் வேகமாக நடந்து தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. புதுச்சேரியை பொருத்தவரை இது பார்ட் டைம் வேலையாக உள்ளது. துறை பணிகள் தான் முதன்மையாக உள்ளது. யாராவது தேடி வந்தால் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இல்லையென்றால் அப்படியே அரசு மவுனமாகி விடுகிறது. யாரை தேடி சென்று முதலீடுகளை ஈர்ப்பதில்லை.
இந்த பார்ட் டைம் முதலீடு முறையை மாற்றினால் தான் புதுச்சேரிக்கு ஏராளமான முதலீடுகள் வரும். புதுச்சேரியில் பிப்டிக், மாவட்ட தொழில் மையம் வழியாக தொழில் துவங்க வழிகாட்டுகின்றன. இது உள்ளூரில் தொழில் வழிகாட்ட ஓகே. ஆனால் வெளிநாடு, வெளி மாநில முதலீடு ஈர்ப்பு விவாகரத்தில் இது மட்டும் போதாது.
முதலீடுகளை ஈர்ப்பதில் நாம் மிகவும் பின்தங்கி உள்ளோம். இந்த கசப்பான உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். புதுச்சேரியில் முதலீடுகளை ஈர்க்க தமிழகத்தை போன்ற ஒரு வலுவான முழு நேர தொழில் ஆலோசனை வழிகாட்டி அமைப்பு காலத்தின் கட்டாய தேவையாகிறது. இந்த விஷயத்தில் கவர்னர், முதல்வர், துறை அமைச்சர் உட்கார்ந்து பேசி, இந்த அமைப்பினை கொண்டு வர வேண்டும்' என்றனர்.

