கந்தர் சஷ்டி சூரசம்ஹார விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
கந்தர் சஷ்டி சூரசம்ஹார விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : நவ 11, 2026 12:12 AM

புதுச்சேரி: சாரம் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்தர் சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
புதுச்சேரி, சாரம் முத்துவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி, நாகமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கந்தர் சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது.
இதையொட்டி, நேற்று முன்தினம் (9ம் தேதி) மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிருத் சங்கிரஹணம் நடந்தது.
நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, காப்பு கட்டுதல், கொடியேற்றம், இரவு யாகசாலை பூஜை ஆரம்பம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனையுடன் சுவாமி அன்ன வாகனத்தில் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்வாக, வரும் 15ம் தேதி இரவு 7:00 மணிக்கு சக்திவேல் வாங்குதல், ஆட்டு கிடா வாகனத்தில் சூரசம்ஹாரம், இரவு 9:30 மணிக்கு சுவாமி மயில் வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. 16ம் தேதி இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 18ம் தேதி காலை 8:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், இரவு 7:00 மணிக்கு கோவில் குளத்தில் தெப்ப உற்சவம், 20ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பொன் நீலகண்டன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.
