UPDATED : நவ 18, 2026 06:00 PM
ADDED : நவ 18, 2026 05:56 PM

காக்கிச்சட்டை போட்டா லா அண்ட் ஆர்டரை மட்டும் பார்த்துட்டு போகலாம்... ஆனா, நம்ம ஊர் பொண்ணுங்களோட பாதுகாப்பைப் பார்த்துக்காம விட்டா எப்படி? - கம்பீரமும் தாயுள்ளமும் கலந்த குரலில் கேட்கிறார் புதுச்சேரி காவல்துறையின் ஆல்-ரவுண்டர் பெண் காவலர் ஹேமமாலினி.
பள்ளி, கல்லுாரி, பல்கலைக்கழக மாணவிகளுக்கு கடந்த 35 ஆண்டுகளாக தற்காப்புக் கலைகளை இலவசமாகக் கற்றுக்கொடுத்து, இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தைரிய லட்சுமிகளை உருவாக்கிக் களத்தில் கெத்து காட்டி வரும் இவர் தற்போது கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் பணியாற்றி வருகிறார். நேர்காணலுக்காக சந்தித்தபோது சிரிப்புடன் தொடங்கிய உரையாடல், பெண்களின் பாதுகாப்பு குறித்த உரத்த சிந்தனையாக விரிந்தது...
போலீஸ் டிபார்ட்மென்ட்ல 20 வருஷம், சமூக சேவையில 35 வருஷம்னு உங்களோட டிராக் ரெக்கார்டு துாள் பறக்குதே... ரெண்டையும் எப்படி இவ்வளவு அழகா பேலன்ஸ் பண்றீங்க?
எனக்கு போலீஸ் வேலைங்கிறது வெறும் யூனிபார்ம் போட்டுட்டு கேஸ் எழுதுற விஷயம் இல்லைங்க. அது மக்களோட நேரடியா நெருங்கிப் பழகி, அவங்களோட கஷ்ட நஷ்டங்கள்ல தோள் கொடுக்கிற ஒரு அருமையான வாய்ப்பு.
சின்ன வயசுல இருந்தே எனக்குச் சமூக சேவை மேல ஒரு தனி காதல் உண்டு. குறிப்பா, நம்ம ஊர் பொண்ணுங்களோட பாதுகாப்பு எனக்கு எப்போதுமே பர்ஸ்ட் பிரையாரிட்டி; அவங்களை உடலளவிலும் மனசளவிலும் ஒரு இரும்புப் பெண்மணியா மாத்தணும்னு தோணுச்சு... அந்த ஒற்றை லட்சியம்தான் என்னை இன்னைக்கு இந்த இடத்துல கொண்டு வந்து நிறுத்தியிருக்கு..
தற்காப்புப் பயிற்சியில பொண்ணுங்களோட ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு? களத்துல அவங்க காட்டும் வேகம் எப்படிப்பட்டது?..
சும்மா மேடை ஏறி தைரியமா இருங்கடினு உதட்டளவுல சொல்ற வார்த்தைங்க எப்போதுமே ஆபத்து நேரத்துல உதவாதுங்க. அதான் நேரடியாகவே களத்துல இறங்கி, ஆபத்தான கட்டங்கள்ல எப்படிச் சுதாரிச்சு எதிராளியை நிலைகுலைய வைக்கணும்னு தற்காப்பு நுணுக்கங்களைச் சொல்லித் தர்றேன்.
ஒரு பொண்ணு ரோட்டுல தனியா போகும்போது பயப்படாம, யாராவது தப்பா நடக்க முயன்றா ஸ்பாட்லயே எதிர்த்து நிக்கிற அந்தச் சிறுத்தையின் துணிச்சல் அவங்க கண்ணுல தெரியும்போது தான், ஒரு டிரைனரா எனக்கு முழு திருப்தியே கிடைக்கும்..
தற்காப்பு மட்டுமில்லாம, டிராபிக் அவேர்னஸ், ஸ்டூடென்ட்ஸ் கவுன்சிலிங்னு ஆல்-ரவுண்டரா கலக்குறீங்களே... அதைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்?
இன்னைக்கு இருக்கிற இளம் தலைமுறைக்குச் சட்ட விழிப்புணர்வும், பாதுகாப்பு நெறிமுறைகளும் ரொம்பவே அவசியம். வீட்டை விட்டு வெளியே வந்தா ரோடுதான் முதல் களம். அங்கே டிராபிக் ரூல்ஸைப் புரியவச்சு, விபத்துகளைக் குறைச்சு, எல்லாரும் பத்திரமா வீடு போய் சேர விழிப்புணர்வுப் பிரசாரங்களை முன்னெடுக்கிறோம். நம்ம வீட்டின் ஒவ்வொரு உயிரும் நமக்கு முக்க முக்கியம் இல்லையா?
பள்ளி, கல்லூரி மாணவிகளோட விழிப்புணர்வு அனுபவங்கள் உங்க மனசுக்கு எவ்வளவு நெருக்கமானது?
அவங்க முன்னாடி போய் காக்கி யூனிபார்மோட நிக்கும்போது, அவங்க கண்ணுல ஒரு பெரிய நம்பிக்கை ஒளி பளிச்சிடும். பாதுகாப்பு, சுயமரியாதை பத்தியெல்லாம் பேசும்போது அதிகார போதை இல்லாம அவங்கள்ல ஒருத்தியா கலந்து பேசுவேன்.
ஒரு கம்பீரமான போலீஸா மட்டுமில்லாம, அவங்களுக்கு வழிகாட்டுற ஒரு சொந்த அக்காவா, அம்மாவா என்னை அவங்க பார்க்கும்போது உண்மையிலேயே நெஞ்சம் நெகிழ்ந்து போகுதுங்க..
காக்கிச்சட்டைக்கு பின்னால் ஒரு அன்னையின் அரவணைப்பையும், பள்ளி மாணவிகளுக்கு பேராசானின் வழிகாட்டலையும் ஒரே நேரத்தில் சாதித்துக் கொண்டிருக்கும் ஹேமமாலினி போன்ற பெண் காவலர்கள், புதுச்சேரி மண்ணிற்கு கிடைத்த பெருமிதம்..
