/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தினமும் 10 லட்சம் லிட்டர் குடிநீர்... சுத்திகரிப்பு; பலே திட்டத்திற்கு தயாராகும் அரசு
/
தினமும் 10 லட்சம் லிட்டர் குடிநீர்... சுத்திகரிப்பு; பலே திட்டத்திற்கு தயாராகும் அரசு
தினமும் 10 லட்சம் லிட்டர் குடிநீர்... சுத்திகரிப்பு; பலே திட்டத்திற்கு தயாராகும் அரசு
தினமும் 10 லட்சம் லிட்டர் குடிநீர்... சுத்திகரிப்பு; பலே திட்டத்திற்கு தயாராகும் அரசு
ADDED : ஜூலை 26, 2025 03:20 AM

புதுச்சேரி: தனியார் பங்களிப்புடன் தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து,மேல்நிலை தொட்டி மூலமாக வீடுகளுக்கு விநியோகிக்கும் திட்டத்தை நகரப் பகுதியில் செயல்படுத்தப்பட உள்ளது. புதுச்சேரி என்றாலே சுவையான தண்ணீர் தான் நினைவிற்கு வரும். அந்த பெருமையை புதுச்சேரி எப்போதே இழந்துவிட்டது. நிலத்தடி நீர் மட்டம் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது. கடல் நீர் நிலத்தடி நீரில் கலந்து விட்டது. புதுச்சேரி நகர பகுதியில் நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்தாக இல்லை.
ரத்தப் பரிசோதனை எப்படி ஒருவருக்கு முக்கியமோ, அதைவிட பல மடங்கு முக்கியம், ஒவ்வொருவரும் அருந்தும் குடிநீருக்கான டி.டி.எஸ்., பரிசோதனை. பொதுவாக குடிநீரின் டி.டி.எஸ்., 500 பி.பி.எம்., இருந்தால் அது குடிக்கத்தக்க அளவாக கருதப்படுகிறது. ஆனால் நகரின் பல பகுதிகளில் குடிநீரில் டி.டி.எஸ்., அளவு 2000 பி.பி.எம்.,முதல் 3000 வரை அதிகரித்துள்ளது.
பொதுப்பணித் துறை மேல்நிலை நீர் தேக்க தொட்டி வாயிலாக விநியோகிக்கும் தண்ணீரில் கூட இந்த டி.டி.எஸ்., அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் டி.டி.எஸ்.,அதிகமாக இருக்கும் தண்ணீருடன் டி.டி.எஸ்., குறைவாக இருக்கும் இடங்களில் கிடைக்கும் தண்ணீர் கலக்கப்பட்டு தான் தற்போது வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அப்படி இருந்தும் கூட, குடிநீர் குடிக்க முடியாத அளவிற்கு டி.டி.எஸ்., அளவு உள்ளது.
இந்நிலையில், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் ஏற்றப்படும் குடிநீரை சுத்திகரித்து ஏற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டத்தை சுதேசி மில் வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் விரைவில் துவங்கப்பட உள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சுதேசில் மில் வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் விசாலமான இடம் வசதி உள்ளது. எனவே இங்கு தனியார் பங்களிப்புடன் 10 லட்சம் லிட்டர் குடிநீரை சுத்திகரிப்பு செய்து, மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஏற்றும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், தலைமை பொறியாளர் வீரசெல்வம், உத்தரவின்பேரில் தீட்டப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் 2,800 வரை டி.டி.எஸ்., உள்ள நிலையில், இந்த சுத்திகரிப்பினால் 100 வரை தான் குடிநீரில் டி.டி.எஸ்., இருக்கும். எனவே இது பாதுகாப்பான குடிநீர். இந்த குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி வாயிலாக கலந்து வீடுகளுக்கு விநியோகிக்கப்படும். இந்த சுத்திகரிப்பு திட்டம் ரூ. 3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை டெண்டர் எடுத்த நிறுவனம் 7 ஆண்டுகள் வரை பராமரிக்கும். இதற்கு ஒவ்வொரு ஆண்டும் அந்நிறுவனத்திற்கு வழங்கப்படும் தொகையை அரசு நிர்ணயம் செய்யும். இத்திட்டத்தின் மூலம் டி.டி.எஸ்., குறைந்த பாதுகாப்பான குடிநீர் வழங்கும் திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது' என்றனர்.