/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காற்று - சூரிய ஆற்றலில் ஒளிரும் அரசு பள்ளி பசுமை கனவுகளை மின்சாரமாக மாற்றி சிறார்கள் அசத்தல்
/
காற்று - சூரிய ஆற்றலில் ஒளிரும் அரசு பள்ளி பசுமை கனவுகளை மின்சாரமாக மாற்றி சிறார்கள் அசத்தல்
காற்று - சூரிய ஆற்றலில் ஒளிரும் அரசு பள்ளி பசுமை கனவுகளை மின்சாரமாக மாற்றி சிறார்கள் அசத்தல்
காற்று - சூரிய ஆற்றலில் ஒளிரும் அரசு பள்ளி பசுமை கனவுகளை மின்சாரமாக மாற்றி சிறார்கள் அசத்தல்
ADDED : பிப் 08, 2026 04:14 AM

பூமியின் இயற்கை வளங்கள் நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டே வருகின்ற இக்காலகட்டத்தில், எதிர்காலத்தின் ஒரே நம்பிக்கை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதனை மக்களுக்கு உணர்த்தும் வகையில், மத்திய அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அந்த விழிப்புணர்வை புத்தகப் பக்கங்களில் மட்டுமன்றி, மாணவர்களின் கைகளால், அவர்களின் சிந்தனையால், நேரடி அனுபவமாக மாற்றியிருக்கிறது புதுச்சேரி முத்தியால்பேட்டை அரசு தொடக்கப் பள்ளி.
பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தவுடன், மொட்டை மாடியில் சுழலும் காற்றாலை மற்றும் சூரியனை நோக்கி விரிந்துள்ள சோலார் பேனல்கள் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. இது சாதாரண தொழில்நுட்ப காட்சி அல்ல; ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் கனவுகளும், அறிவும் ஒன்றிணைந்து உருவான பசுமை முயற்சி.
இப்பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் முகமது ஆசிப், முகமது ஆதில், அப்ரின் பானு, வர்ஷிதா, பவிசிகா ஆகிய மாணவர்கள், ஒரு படி மேலே சென்று “வின்ட்-சோலார் எனர்ஜி சிஸ்டம்” எனும் காற்று-சூரிய ஆற்றல் அமைப்பை வடிவமைத்து, பள்ளி மொட்டை மாடியில் பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்து அசத்தியுள்ளனர்.
காற்றின் ஓசையும், சூரிய ஒளியின் வெப்பமும் இணைந்து உருவாக்கும் இந்த மின்சாரம், பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. அந்த சேமிக்கப்பட்ட ஆற்றல், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பள்ளி வளாகத்தை ஒளியால் நிரப்புகிறது. இருளில் மூழ்கியிருக்க வேண்டிய பள்ளி, பசுமை மின்சாரத்தில் மிளிரும் காட்சி, சுற்றுச்சூழலுக்கான புதிய நம்பிக்கையை விதைக்கிறது.
இந்த முழு முயற்சிக்கும் வழிகாட்டியாக இருப்பவர் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ரேவதி. மாணவர்களையே முன்னணியில் நிறுத்தி, அவர்களையே அமைப்பை உருவாக்கச் செய்து, தினமும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் அவசியத்தை நடைமுறை கற்றலாக எடுத்துச் சொல்லி வருகிறார்.
பள்ளி முதல்வர் பாலமுருகன் கூறுகையில், “இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பு, இரவு நேரங்களில் எங்கள் பள்ளியை ஒளிரச் செய்வதோடு மட்டுமல்லாமல், பள்ளியின் கார்பன் தடத்தை கணிசமாகக் குறைக்கிறது. பொதுமின்சாரத்தை பாதுகாப்பதோடு, மாணவர்களுக்கு ஒரு சிறந்த கற்றல் கருவியாகவும் செயல்படுகிறது.
சுற்றுச்சூழல் மீதான பொறுப்புணர்வை மாணவர்களிடம் வளர்க்கிறது. நடைமுறை அனுபவத்தின் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்களை அவர்கள் நேரடியாக கற்றுக்கொள்கிறார்கள். இந்த முயற்சி, மற்ற பள்ளிகளுக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும்,” என்றார்.
வழிகாட்டி ஆசிரியர் ரேவதி கூறுகையில், “இந்திய அளவில் பல பள்ளிகளில் சோலார் பேனல்கள் உள்ளன. ஆனால் காற்றாலை மின் உற்பத்தியை அதனுடன் இணைத்துள்ள பள்ளிகள் இல்லை. எங்களுடைய பள்ளியில் இரண்டு ஆற்றல்களையும் ஒன்றிணைத்து மின்சாரம் உற்பத்தி செய்து, இரவில் பள்ளியை ஒளிரவிடுகிறோம்.
வங்கக் கடலோரத்திற்கு அருகாமையில் இருப்பதும், பள்ளியின் மூன்றாவது தளத்தில் அமைக்கப்பட்டதாலும், சோலாரை விட காற்றாலை மின்உற்பத்தி சிறப்பாக கிடைக்கிறது.
சோலார் பேனல் தினசரி 40 வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. காற்றாலை சராசரியாக 15 வாட்ஸ் மின்சாரம் வழங்குகிறது. ஒரு நாளில் மொத்தமாக 55 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கிறது.
இதன் மூலம் நான்கு எல்.இ.டி. பல்புகளை 12 மணி நேரம் எரியவிட முடிகிறது. தற்போது 9 எல்.இ.டி. வாட்ஸ் பல்புகளை எரியவிட்டுள்ளோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மாணவர்களுக்கு புரிய வைக்க, மாணவர்களையே கொண்டு இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்,” என்றார். காற்றும், சூரியனும் கை கோர்த்து, முத்தியால்பேட்டை அரசு பள்ளி உருவாக்கியுள்ள இந்தப் பயணம், சமூகத்திற்கே ஒரு ஒளிரும் வழிகாட்டியாக மாறியுள்ளது.

