/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயத் துறையை மறுபரிசீலனை செய்ய கவர்னர் கைலாஷ்நாதன் வலியுறுத்தல்
/
விவசாயத் துறையை மறுபரிசீலனை செய்ய கவர்னர் கைலாஷ்நாதன் வலியுறுத்தல்
விவசாயத் துறையை மறுபரிசீலனை செய்ய கவர்னர் கைலாஷ்நாதன் வலியுறுத்தல்
விவசாயத் துறையை மறுபரிசீலனை செய்ய கவர்னர் கைலாஷ்நாதன் வலியுறுத்தல்
ADDED : ஜன 27, 2025 05:10 AM
புதுச்சேரி :   பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்குவதில் அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது என கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.
குடியரசு தின விழாவில் அவர், பேசியதாவது;
பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்குவதில் இந்த அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் 45 சதவீத மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, விவசாயத் துறையின் வளர்ச்சிக்காகவும் விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
விவசாய நிலப்பரப்பு ஆண்டு தோறும் குறைந்து வருகிறது. எனவே, விவசாயத் துறையை  மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. இளைய தலைமுறையினரின் கவனத்தை  விவசாயத்தை நோக்கித் திருப்ப வேண்டும்.
உயர் தொழில்நுட்பம் சார்ந்த விவசாயம், தோட்டக்கலை ஆகியவற்றின் மூலமாக ற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுக விரிவாக்கம், பெரிய காலாப்பட்டு மற்றும் நல்லவாடு பகுதியில் மீன் இறங்கும் தளம் அமைக்கும் பணிகள் மத்திய அரசின் நிதி உதவியோடு ரூ.92.47 கோடி செலவில் நடந்து வருகிறது. மாநிலத்தில் 14 இடங்களில் செயற்கை மீன் உறைவிடங்கள் ஏற்படுத்த ரூ.4.34 கோடிக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு துறைகளில் இதுவரை காவல்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, மின்துறை, நிர்வாகச் சீர்த்திருத்தத்துறை உள்ளிட்ட துறைகளில் 2,043 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.
உலக நாடுகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுப்படுத்தவும் ரயில் போக்குவரத்தை அதிகப்படுத்தவும் மத்திய அரசுடன் இணைந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை மேம்படுத்தி அமைதியை பாதுகாக்கவும் காவல்துறையை வலுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காவல்துறையில் காலி பணியிடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்பப்பட்டு உள்ளது.
சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க சாலை விபத்துகளில் உயிரிழப்பு இல்லா புதுச்சேரி' இயக்கத்தை அரசு முன்னெடுத்து உள்ளது. மக்களின் நம்பிக்கையோடும், பங்களிப்போடும் வளமான புதுச்சேரியை, வலிமையான பாரதத்தை உருவாக்குவோம். இவ்வாறு கவர்னர் பேசினார்.

