
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலையில், உள்ளூர் மாணவர்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ளூர் மாணவர்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் உண்ணா விரத போராட்டம் நடந்தது. பல்கலைக்கழக நுழைவ வாயிலில் எதிரே நடந்த போராட்டத்திற்கு புதுச்சேரி பல்கலைக்கழகத் தலைவர் அகில் சவுத்ரி தலைமை தாங்கினார்.
கோட்ட பொறுப்பாளர் தீபன், மாவட்ட செயலாளர் பிரகாஷ், பல்கலைக்கழக செயலாளர் ஆரத்தி கண்டன உரையாற்றினார். பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் நிர்வாகிகள் கூறும்போது, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் பல்கலைக்கழகத்திற்கு சென்று வர 10க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த பஸ்கள் மாணவர்களுக்கு கட்டணமின்றி பயன்படுத்தி வந்தனர். நிதி நெருக்கடி காரணமாக இந்த பஸ்கள் இயக்கப்படவில்லை என பல்கலைக்கழகம் கூறி வருகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. புதுச்சேரி மாணவர்களுக்கு பஸ்களை இயக்காவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றனர்.