தட்டாஞ்சாவடி தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன்: தி.மு.க.,வேட்பாளர் சேதுசெல்வம் உறுதி
தட்டாஞ்சாவடி தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன்: தி.மு.க.,வேட்பாளர் சேதுசெல்வம் உறுதி
UPDATED : அக் 02, 2026 01:46 AM
ADDED : அக் 02, 2026 01:44 AM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என தி.மு.க., வேட்பாளர் சேது செல்வம் கூறி ஓட்டு சேகரித்தார்.
தட்டாஞ்சாவடி இடைத் தேர்தல் தி.மு.க., வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து புதுச்சேரி பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் தினமும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று வினோபா நகர், விநாயக முருகன் நகர், லட்சுமிநகர் ஆகியோர் பகுதிகளில் தி.மு.க., நிர்வாகிகள், கூட்டணி கட்சியினருடன் சென்று ஓட்டுசேகரித்தனர்.
அப்போது, தி.மு.க., வேட்பாளர் சேதுசெல்வம் பேசியதாவது: தட்டாஞ்சாவடி முதல்வரின் செல்ல தொகுதி என்கின்றனர். ஆனால் 20 ஆண்டுகள் இத்தொகுதி பின்னோக்கி சென்றுவிட்டது. எந்த அடிப்படை வசதியும் இல்லை.
ரோடுகள் அனைத்தும் குண்டு குழியுமாக இருக்கின்றது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை.
ஏழைகளுக்கு வீட்டு மனைகள் கூட வழங்கப்படவில்லை. அடிக்கடி மின் தடை ஏற்பட்டு தொகுதி முழுதும் இருளில் மூழ்கிவிடுகின்றது.
முதல்வர் தொகுதியே இப்படி என்றால் மற்ற தொகுதிகளை பற்றி சொல்ல வேண்டியதில்லை. தி.மு.க., இத்தொகுதியில் வெற்றிப் பெற்றதும், படித்த தொகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும்.
பின்னோக்கி செல்லும் தட்டாஞ்சாவடி தொகுதியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன். தட்டாஞ்சாவடி தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்.
தொகுதி முழுவதும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து பாதுகாப்பான குடிநீரை மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்வேன். தொகுதி முழுவதும் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடி க்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
