'புதுச்சேரியில் இருந்து கொண்டு மாநில அந்தஸ்து கேட்டால் கிடைக்காது'
'புதுச்சேரியில் இருந்து கொண்டு மாநில அந்தஸ்து கேட்டால் கிடைக்காது'
UPDATED : ஆக 20, 2026 08:35 PM
ADDED : ஆக 20, 2026 08:30 PM
புதுச்சேரி: புதுச்சேரி காங்., சார்பில் தலைமை அலுவலகத்தில் நடந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்தநாள் விழாவில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
கடந்த காங்., ஆட்சியில் கவர்னராக இருந்த கிரண்பேடி, முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என, மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பினார். அந்த கூட்டத்தில் கவர்னர் பங்கேற்க கூடாது என நான் எதிர்ப்பு தெரிவித்தபோது, வேடிக்கை பார்த்தவர் ரங்கசாமி. அதே நிலை தற்போது அவருக்கு வந்துள்ளது.
மாநில அந்தஸ்து கிடைக்காத காரணத்தினால் தான் புதுச்சேரியில் வளர்ச்சி இல்லை. முதல்வருக்கு அதிகாரமில்லை என, புலம்புகிறார். ஆனால், தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்று உள்துறை அமைச்சரிடம், நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். எங்களுக்கு அதிகாரம் வேண்டும். கவர்னர் எல்லாவற்றையும் தடுத்து நிறுத்துகிறார்.
ஆகையால், மாநில அந்தஸ்து தொடர்பான கோப்புகளை பார்லிமெண்ட்டில் கொண்டு வந்து மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றி தர வேண்டும் என கேட்பதற்கு ஏன் ரங்கசாமி செல்லவில்லை.
புதுச்சேரியில் இருந்து கொண்டு மாநில அந்தஸ்து கேட்டால் கண்டிப்பாக கிடைக்காது. இதற்காக பெரிய போராட்டத்தை நடத்த வேண்டி வரும். முதல்வரை மிரட்டி பா.ஜ., காரியத்தை சாதித்து கொள்கிறது.
அமைச்சர்களுக்கு எந்தந்த துறைகள் கொடுக்க வேண்டும் என்ற அதிகாரம் முதல்வருக்கு தான் உள்ளது. தன்னுடைய அதிகாரத்தை பறிக்கும் கூட்டணி கட்சியுடன் அவர் இருப்பதற்கான காரணம் என்ன. கடந்த 5 ஆண்டுகளாக நடந்தது தான் இப்போதும் தொடர போகிறது' என்றார்.
