/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கடற்கரையில் சுதந்திர தின விழா.... கோலாகலம்: முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியேற்றினார்
/
புதுச்சேரி கடற்கரையில் சுதந்திர தின விழா.... கோலாகலம்: முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியேற்றினார்
புதுச்சேரி கடற்கரையில் சுதந்திர தின விழா.... கோலாகலம்: முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியேற்றினார்
புதுச்சேரி கடற்கரையில் சுதந்திர தின விழா.... கோலாகலம்: முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியேற்றினார்
ADDED : ஆக 16, 2025 03:01 AM

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்த 79வது சுதந்திர தினவிழாவில் முதல்வர் ரங்கசாமிதேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் 79வது சுதந்திர தினவிழா நேற்று கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது.
காந்தி திடலின் கீழ் கொடிக்கம்பத்துடன் விழா மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 9:08 மணிக்கு முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி கடற்கரை சாலைக்கு காரில் வந்தார். அவரை தலைமை செயலாளர் சரத் சவுகான் வரவேற்று, மேடைக்கு அழைத்து சென்றார். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றினார்.
இதையடுத்து முதல்வர் ரங்கசாமி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.
பின், மேடை திரும்பிய அவர், சுதந்திர தின பேரூரையாற்றினார். அதன் பிறகு மிக சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு முதல்வரின் காவலர் பதக்கம், ராஜிவ் காந்தி காவல் பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய அரசு துறை, கல்வி நிறுவனத்திற்கு முதல்வரின் விருதும், இந்திய மருத்துவமுறை மற்றும் ஹோமியோபதி துறையில் பணியாற்றும் ஆயுஷ் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், அலுவலக பணியாளர்களுக்கு முதல்வரின் சிறந்த சேவைக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
சிறப்பாக பணியாற்றிய தேசிய மாணவர் படை முதுநிலை, இளநிலை பிரிவினருக்கு முதல்வரின் தங்க பதக்கம், கல்வி அமைச்சரின் வெள்ளி பதக்கம், கல்வி செயலரின் வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. சிறந்த சமூக சேவையாற்றிவர்களுக்கு முதல்வரின் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
அணிவகுப்பு இதை தொடர்ந்து காவல்துறையின் பல்வேறு பிரிவினர், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் மிடுக்கான அணிவகுப்பு நடந்தது. தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவ வீரர்கள், சாரணர், சமுதாய நலப்பணித்திட்டம் மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது.
கலை நிகழ்ச்சி தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பிற மாநில கலைக்குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. சிறந்த அணிவகுப்பு, சிறந்த கலை நிகழ்ச்சிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
விழாவில், சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், துணை சபாநாயகர் ராஜவேலு, எதிர்க்கட்சி தலைவர் சிவா, செல்வகணபதி எம்.பி., என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சம்பத், செந்தில்குமார், பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம், சுயேட்சை எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார், நியமன எம்.எல்.ஏ.,க்கள் தீப்பாய்ந்தான், செல்வம், தலைமை செயலர் சரத் சவுகான், டி.ஜி.பி., ஷாலினி சிங், அரசு செயலர்கள் ஜவகர், விக்ராந்த் ராஜா, ஸ்மிதா, ஐ.ஜி., அஜித் குமார் சிங்லா. டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், அரசு செயலர்கள், இயக்குநர்கள், தியாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். சுதந்திர தினவிழாவையொட்டி புதுச்சேரி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.