முருங்கப்பாக்கத்தில் நவீன முறையில் நில அளவை 30-க்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
முருங்கப்பாக்கத்தில் நவீன முறையில் நில அளவை 30-க்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
UPDATED : நவ 12, 2026 07:15 PM
ADDED : நவ 12, 2026 07:12 PM

புதுச்சேரி: முருங்கப்பாக்கம் கிராம மக்கள் தங்களது நில அளவை ஆவணங்களை வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, நில அளவைத் துறை தெரிவித்துள்ளது.
முருங்கப்பாக்கம் வருவாய் கிராமத்தில், பழைய நில அளவைக்குப் பதிலாக செயற்கைக்கோள் துணையுடன் புதிய டிஜிட்டல் முறையில் நில அளவை செய்யும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இங்குள்ள அரசு நிலங்கள், கட்டடங்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் தனியார் வீட்டு மனைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் அளவிடும் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஒவ்வொரு உட்பிரிவிற்கும் தனிப்பட்ட புதிய அடையாள எண் மற்றும் துல்லியமான எல்லைகளை வரையறை செய்து எப்.எம்.பி., எனும் புலப்படம் தயாரிக்கப்பட உள்ளது.
நில உரிமையாளர்களின் ஆவணங்களின் அடிப்படையில் நிலவரித்திட்டப் பதிவேடுகளை மேம்படுத்தப்பட உள்ளது. இதுவரை உட்பிரிவு செய்யப்படாத இடங்களுக்குப் புதிய பட்டா வழங்கப்பட உள்ளது. நில எல்லைத் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதுடன், அனைத்து விவரங்களும் அடங்கிய புதிய உரிமைப் பதிவேட்டுச் சான்றிதழ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் சொத்து விவரங்களை இணையவழி மூலம் பார்வையிடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே முருங்கப்பாக்கம் கிராமத்தில் நிலம், கட்டடம் மற்றும் வீட்டு மனைகள் வைத்துள்ள பொதுமக்கள், தங்களது சொத்து ஆவணங்கள், உரிமையை உறுதிப்படுத்தும் நீதிமன்ற வழக்கு நகல்கள், மற்றும் சுய விவரங்களான புகைப்படம், மொபைல் எண் ஆகியவற்றுடன் சுய சான்றொப்பமிட்டு வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எங்கே சமர்ப்பிக்க வேண்டும்?
புதுச்சேரி, சாரம், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் நில அளவைப் பிரிவு அலுவலகம் பத்திரப் பதிவுத் துறை கட்டடம், இரண்டாவது மாடி அலுவலக வேலை நாட்களில் ஆவணங்களை ஒப்படைக்கலாம்.
பணி காரணமாக வார நாட்களில் வர இயலாத பொதுமக்களின் வசதிக்காக, நாளை 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வரும் சனிக் கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலகத்தில் ஆவணங்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.
30-ம் தேதிக்கு பிறகு பெறப்படும் ஆவணங்கள், தற்போது நடைபெறும் புதிய நில அளவைப் பணிகள் முழுமையாக முடிந்த பிறகே பரிசீலிக்கப்படும். முருங்கப்பாக்கம் கிராம மக்கள் உரிய காலக்கெடுவிற்குள் ஆவணங்களை வழங்க நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குநர் செந்தில்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
