அரசு துறைகளில் நிகழ்நேர கண்காணிப்பு விரைவில் அறிமுகமாகிறது: நிதி மேலாண்மை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது
அரசு துறைகளில் நிகழ்நேர கண்காணிப்பு விரைவில் அறிமுகமாகிறது: நிதி மேலாண்மை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது
UPDATED : செப் 04, 2026 07:40 PM
ADDED : செப் 04, 2026 06:53 PM

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் நிதி வருவாய்களை நிகழ்நேர அடிப்படையில் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு, மாநிலத்தின் பொது நிதி மேலாண்மை அமைப்பை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் வலுப்படுத்தும் நோக்கில், மிக முக்கியமான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் அதிநவீன இ-குபேர் மைய வங்கி தீர்வுத் தளத்துடன் இணைந்து, பாதுகாப்பான மற்றும் விரைவான இ-பேமெண்ட் எனும் மின்னணு கட்டண முறையை அரசு ஏற்கெனவே வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, நிர்வாகத்தில் முழுமையான வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரவும், நிதி சார்ந்த செயல்பாடுகளில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கவும் மின்னணு வரவு முறை மற்றும் காகிதமில்லாப் பணிச் சூழலை உருவாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக இ-குபேர் வங்கி சேவையுடன் புதுச்சேரி அரசின் மின்னணு வரவு முறையும் கைகோர்க்க உள்ளன. இந்த இ-குபேர் அமைப்பால் அரசு துறைகளில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன.
அரசுக்கு வர வேண்டிய வரிகள், கட்டணங்கள் மற்றும் இதர வருவாய்கள் இ-குபேர் மின்னணு வரவு முறை மூலம் நேரடியாக ரிசர்வ் வங்கி கணக்கில் சேரும். இதனால் அரசின் நிதி வரவு நிகழ்நேர அடிப்படையில் கணக்கிடப்பட்டு, துல்லியமாகக் கண்காணிக்கப்படும்.
காகிதமில்லா நிர்வாகம்:: அரசுத் துறைகளில் சம்பளப் பட்டியல்கள் மற்றும் இதர செலவினங்களுக்கான பில்கள் இனி முழுமையாக மின்னணு மயமாக்கப்படும். இதனால் பல்லாயிரக்கணக்கான காகிதப் பயன்பாடு குறைக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, கோப்புகள் தேங்கும் நிலையும் முற்றிலும் மாறும்.
நேரடிப் பணப்பரிமாற்றம்:: பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள், ஒப்பந்ததாரர்களுக்கான தொகைகள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளம் இடைத்தரகர்கள் இன்றி, தாமதமின்றி நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பாதுகாப்பாகச் சென்று சேரும்.
அரசுக்கான கட்டணங்கள் மற்றும் வரிகளை எந்த இடத்திலிருந்தும், எந்நேரமும் டிஜிட்டல் முறையில் எளிதாகச் செலுத்தலாம். செலுத்திய தொகைகளுக்கான உடனடி அதிகாரப்பூர்வ டிஜிட்டல் ரசீதும் உடனுக்குடன் வழங்கப்படும்.
நிர்வாகத்திற்கும்..: அரசு நிர்வாகத்தினை பொருத்தவரை நிதி கசிவுகள் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டு, வரவு-செலவு கணக்குகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் விளங்கும். இது அரசின் வருங்கால வரவு-செலவுத் திட்டமிடலை மிகவும் துல்லியமாக்க உதவும்.
அரசு ஊழியர்கள்:: சம்பளம் மற்றும் இதர சலுகைகளுக்கான கோரிக்கைகள், மின்னணு முறையிலேயே விரைவாக ஒப்புதல் பெறப்பட்டு, தொகையும் நேரடியாகக் கணக்கில் வரவு வைக்கப்படும். நிதி மேலாண்மையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் புகுத்துவதன் மூலம், புதுச்சேரி அரசு தன் நிதி ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதோடு, வேகமான மற்றும் வெளிப்படையான நல்லாட்சியை மக்களுக்கு வழங்குவதில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என நிதித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
