/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாகன தணிக்கைக்கு கியூ.ஆர்., கோடு ஸ்கேனிங் அறிமுகம்! வங்கி பணத்தை உறுதி செய்ய தேர்தல் துறை முயற்சி
/
வாகன தணிக்கைக்கு கியூ.ஆர்., கோடு ஸ்கேனிங் அறிமுகம்! வங்கி பணத்தை உறுதி செய்ய தேர்தல் துறை முயற்சி
வாகன தணிக்கைக்கு கியூ.ஆர்., கோடு ஸ்கேனிங் அறிமுகம்! வங்கி பணத்தை உறுதி செய்ய தேர்தல் துறை முயற்சி
வாகன தணிக்கைக்கு கியூ.ஆர்., கோடு ஸ்கேனிங் அறிமுகம்! வங்கி பணத்தை உறுதி செய்ய தேர்தல் துறை முயற்சி
ADDED : மார் 22, 2024 06:00 AM

புதுச்சேரி : தேர்தல் நன்னடத்தை அமலுக்கு வந்துள்ள சூழ்நிலையில், வங்கிகளில் இருந்து ஏ.டி.எம்., மையங்களுக்கு அனுப்பும் பணத்தைஉறுதி செய்ய தேர்தல் துறை கியூ.ஆர்., கோடு ஸ்கேனிங்கை அறிமுகப்படுத்தி, தணிக்கை செய்து வருகிறது.
புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், கடந்த 16ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன. உரிய ஆவணமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்துச்செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட் டுள்ளது.
அதேபோல, ஏ.டி.எம்., மையங்களில் வைப்பதற்காகவும், கருவூலங்களிலிருந்து வங்கிக்கும், வங்கியிலிருந்து கருவூலத்துக்கும், பணம் அனுப்பப்படுகிறது. தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால் , வங்கி பணம் எடுத்துச்செல்லும் வாகனங்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த வங்கி வாகனங்கள் மூலம் அனுப்பப்படும் பணத்தை தணிக்கை செய்ய புதுச்சேரி தேர்தல் துறை இ.எஸ்.எம்.எஸ்., என்ற தேர்தல் பறிமுதல் மேலாண்மை சாப்ட்வேர் மூலம் கியூ.ஆர்., கோடு ஸ்கேனிங் முறையை அறிமுகப்படுத்தி, வாகன தணிக்கையை தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது. இதற்கான 340 வங்கிகள் கிளைகள் செயலியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி, வங்கி சார்பில் பணம் அனுப்பப்படும்போது, முழு விவரங்களை உள்ளடக்கிய கியூ.ஆர்., கோடுடன் கூடிய, ரசீது, வாகனங்களில் கொடுத்தனுப்பப்படும். இந்த கியூ.ஆர் கோடினை ஸ்கேன் செய்ததும், ஏ.டி.எம். பணம் நிரப்பும் வாகனத்தில், வங்கியால் அளிக்கப்பட்ட தொகை விபரங்கள், வங்கி கடிதம், ஆவணங்கள் அனைத்துமே நொடியில் தெரிந்து கொள்ள முடிகிறது.
பணம் பறிமுதல் இல்லாமல் வங்கி வாகனத்தை நிறுத்தி சாதாரணமாக பறக்கும்படை தணிக்கை செய்தால் கூட தேர்தல் செலவின பிரிவு உயர் அதிகாரிகள் உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். வங்கி பண விவரங்களை மிக சுலபமாக உறுதி செய்யும் வழிமுறைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
வங்கிகள் கெடுபிடிகள் இல்லாமல் ஏ.டி.எம்., மையங்களுக்கு பணத்தை அனுப்பி நிரப்பி வருகின்றன. வழக்கமாக பறக்கு படைகள் பணத்தை பறிமுதல் செய்தால், அனைத்து நடைமுறைகளும் முடிந்து தேர்தல் செலவின பிரிவுக்கு தாமதமாக தெரிய வரும்.
புதிய நடைமுறையின்படி பணம் பறிமுதல் செய்தால் உடனடியாக தேர்தல் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றுவிடும்.
தேர்தல் சமயத்தில் ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணம் நிரப்ப எடுத்து செல்லும்போது, வாடகை வாகனத்தில் அந்த வங்கியில் பணத்தை தவிர மூன்றாம் தரப்பு ஏஜென்சி, தனி நபர் பணத்தை எடுத்து செல்ல கூடாது எனவும், பணியாளர்கள், ஏஜென்சியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு வங்கி கணக்கில் இருந்து ஒரு மாவட்டம், தொகுதியில் உள்ள பல நபர் வங்கி கணக்குகளுக்கு ஆர்.டி.ஜி.எஸ்., மூலம் வழக்கத்திற்கு மாறாக பணம் பரிமாற்றம் செய்வது கண்காணிக்கப்பட்டு வருகின்றது. வங்கிகளில் அதிகமாக பணம் வரவு வைக்கப்பட்டாலும், வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டாலும் உடனடியாக தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தலில் வேட்பாளர்கள் ஓட்டு சேகரிப்பின்போது பணம் கொடுப்பது போன்று முறைகேடுகளில் ஈடுபட்டால், அவற்றை பொதுமக்களே நேரடியாக சி-விஜில் என்ற செயலியில் புகார் தெரிவிக்கலாம் என்றும், அதில் புகார் பதிவிடப்பட்டதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் துறை தயாராகி வருகிறது.

