ADDED : ஜன 27, 2024 06:26 AM
புதுச்சேரி : அரியாங்குப்பத்தில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியாங்குப்பம், மாஞ்சாலை, அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மதன்ராஜ், 39; மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி இறந்து விட்டார். மகளுடன் வசிக்கிறார். இவருக்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், 35, என்பவர் இருந்தார்.
அவர், அடிக்கடி மதன்ராஜின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். கடந்த பொங்கலன்று வீட்டில் உள்ள பீரோவை மதன்ராஜ் திறந்து பார்த்தார்.
அதில் இருந்த 5 கிராம் நகை, 4,500 ரொக்கத்தை காணவில்லை. இதுகுறித்து சதீஷ்குமாரிடம், மதன்ராஜ் கேட்டபோது, அவர் தான் பீரோவை திறந்து நகை, பணத்தை திருடியதாக கூறினார். திருப்பி தருமாறு கேட்டதற்கு சதீஷ்குமார் தர மறுத்தார்.
இதுகுறித்து மதன்ராஜ் அளித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து சதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.

