UPDATED : அக் 09, 2026 06:09 PM
ADDED : அக் 09, 2026 06:07 PM
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் செவிலிய அதிகாரியாக பணிபுரிந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர், அதிக மருந்து செலுத்தி கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் ரோஹ்தக், சர்க்கரை ஆலை காலனியை சேர்ந்தவர் ரமேஷ் குண்டு மகள் தான்சில், 28; புதுச்சேரி ஜிப்மரில் செவிலிய அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
தட்டாஞ்சாவடி ஜி.டி. நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவர், கடந்த 7 ம் தேதி இரவு பணி முடிந்து, நேற்று முன்தினம் (8ம் தேதி) காலை வீட்டிற்கு புறப்பட்டபோது, வழக்கத்திற்கு மாறாக யாரிடமும் பேசாமல் அவசரமாக வீட்டிற்கு சென்றார்.
சந்தேகமடைந்த சக ஊழியர்கள் அவரை மொபைலில் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவருடன் பணியாற்றும் செவிலிய அதிகாரிகள் பிரவீன், சிமா ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
தொடர்ந்து, வீட்டின் உரிமையாளர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தான்சில் தனது படுக்கையில் சுயநினைவின்றி கிடந்தார். அவர் அருகே காலியான சர்க்கரை நோயாளிகளுக்கு செலுத்தப்படும் மருந்து பாட்டில்கள் மற்றும் தசை தளர்வுக்கு கொடுக்கப்படும் மருந்து குப்பி இருந்தது.
இதையடுத்து, தான்சிலை மீட்டு, ஜிப்மருக்கு அழைத்து சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து டி.நகர் சப் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
