/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
2 மாதத்தில் 1000 பேருக்கு வேலை... ரெடியாக இருங்க: முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு
/
2 மாதத்தில் 1000 பேருக்கு வேலை... ரெடியாக இருங்க: முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு
2 மாதத்தில் 1000 பேருக்கு வேலை... ரெடியாக இருங்க: முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு
2 மாதத்தில் 1000 பேருக்கு வேலை... ரெடியாக இருங்க: முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு
ADDED : டிச 02, 2025 04:36 AM

புதுச்சேரி: இன்னும் இரண்டு மாதத்தில் 1000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். புதுச்சேரி அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் உதவியாளர் 256, வி.ஏ.ஓ., 41, கிராம உதவியாளர் 54, பல்நோக்கு பணியாளர் 9 என மொத்தம் 360 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா கம்பன் கலையரங்கில் நேற்று நடந்தது.
கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் இணைந்து பணி நியமன ஆணை வழங்கினர்.
விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
படித்த இளைஞர்களுக்கு நிரந்தரமான அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதே கனவாக உள்ளது. பல ஆண்டுகளாக புதுச்சேரியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. கடந்த ஆட்சியில் எந்த பணியிடமும் நிரப்படவில்லை. இதனால் வயது முதிர்ந்துவிடும் என இளைஞர்கள் அச்சமாக இருந்தனர். அவர்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் அரசு பணியிடங்கள் தொடர்ச்சியாக நிரப்பி வருகிறோம். அரசு பணிகளில் தொய்வு இருந்தது. போதுமான பணி செய்ய அதிகாரிகள், ஊழியர்கள் இல்லை என்பதே காரணம். இப்படி இருந்தால் மாநிலத்தை எப்படி வளர்ச்சி பணிக்கு கொண்டு செல்ல முடியும். மக்களுக்கும் எப்படி சேவையாற்ற முடியும்.
கடந்த சட்டசபை தேர்தலில் அரசின் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதி அளித்தோம். அதன்படியே நிரப்பியும் வருகிறோம். இதுமட்டுமின்றி, அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களை குறித்த நேரத்தில் சென்றடைந்துள்ளது. மாதந்தோறும் 7ம் தேதி முதியோருக்கு பென்ஷன் வழங்கப்படுகின்றது. இதேபோல் ஒவ்வொரு துறையிலும் மக்கள் நல திட்டங்கள் மக்களை சென்றடைந்து வருகிறது.
இதுவரை 3,264 பணியிடங்களை நிரப்பியுள்ளோம். இன்னும் 2 மாதத்தில் 1000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதற்கான அறிவிப்பு, தேதி விவரத்துடன் வெளியிடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவ கல்லுாரி செவிலியர்களுக்கு ஓரிரு நாளில் பணி ஆணை வழங்கப்படும்.
இந்த பணியிடங்களை நிரப்ப உறுதுணையாக இருக்கும் கவர்னர், தலைமை செயலர், அரசு செயலர்கள், அதிகாரிகளுக்கு நன்றி. தேர்தலுக்கு முன்பாக அனைத்து அரசு பணியிடங்களையும் நிரப்ப அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஊழியர்களுக்கு இந்த வேலை கனவாக இருந்து நிறைவேறியுள்ளது.
நீங்கள் ஒரு சாதி சான்றிதழை பெற எவ்வளவு சிரமப்பட்டு இருப்பீர்கள் என தெரியும். இதுபோல் மக்களும் எந்த சிரமமும் இல்லாமல் சேவைகள் கிடைக்க நீங்கள் பணியாற்ற வேண்டும். நல்ல அதிகாரி என்ற பெயரை மக்களிடம் சம்பாதிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
விழாவில் சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏக்கள் ஆறுமுகம், சாய்சரவணன்குமார், சிவசங்கர், பாஸ்கர், ரமேஷ், தலைமை செயலர் சரத் சவுகான், அரசு செயலர்கள் கிருஷ்ணன் மோகன் உப்பு, கேசவன், மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

