UPDATED : நவ 10, 2026 08:35 PM
ADDED : நவ 10, 2026 08:33 PM
முதியவர் சடலம்: காரைக்கால், கண்ணடியார் தெருவில் உள்ள பாலாஜி காம்ப்ளக்ஸ் வாடகை வீட்டில் வசித்து வந்த சேகர், 73, என்பவர் கடந்த 9ம் தேதி குளியலறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நகர காவல் நிலைய போலீசார், சேகர் உடலை மீட்டு அரசு மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிந்து அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தந்தை: காரைக்கால் அரசு மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி அதிகாலை, நகர் பகுதியை சேர்ந்த டாக்டர் சக்திமைந்தன் பணியில் இருந்தார். அப்போது பெரியபேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபு, 43, மற்றும் அவரது மகன்கள் பிரபாகரன், 20; ஈஸ்வர், 18, ஆகியோர் விபத்தில் காயமடைந்த உறவினரை ஒருவரை மருத்துவமனை அழைத்து சென்றனர். அவரை, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லுமாறு டாக்டர் சக்திமைந்தன் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த மூவரும் டாக்டரை ஆபாசமாக திட்டி, தாக்கினர். காயமடைந்த டாக்டர் சக்திமைந்தன் அளித்த புகாரின் பேரில், நகர இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து பிரபு, பிரபாகரன், ஈஸ்வர் ஆகியோரை கைது செய்தனர்.
விவசாயி சாவு: திருநள்ளாறு, சுரக்குடி, வடக்கு பேட் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ், 56; விவசாயி. நேற்று முன்தினம் நெல் வயலுக்கு கலைக்கொல்லி மருந்து அடிக்க சென்றார். இரவு வரை ஜெயராஜ் வீட்டுக்கு வரவில்லை. அவரது மனைவி லில்லி மற்றும் உறவினர்கள் வயலுக்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு அரசு மருந்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்ததில், அவர், ஜெயராஜ் யூரியாவும், கலைக்கொல்லி மருந்தையும் கலந்து வயலில் தெளித்தபோது, மூக்கில் நெடி ஏறி மயங்கி விழுந்து இறந்தது தெரிய வந்தது. திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
3 வாலிபர்கள் கைது: திருநள்ளாறு, அம்பகரத்துார் ரயில் நிலையம் அருகில் நேற்று முன்தினம் மதுபோதையில் ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், 31, என்பவரை அம்பகரத்துார் போலீசார் கைது செய்தனர்.
நிரவி, சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் நேற்று முன்தினம் ரோந்து சென்றார். பொது இடத்தில் மதுபோதையில் ஆபாசாமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், 32, என்பவரை நிரவி போலீசார் கைது செய்தனர்.
அதே போல், திருப்பட்டினம் பகுதியில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 34, என்பவரை திருப்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.
