எல். நினோ தாக்கத்தால் சாத்துக்குடி விலை அதிகரிப்பு
எல். நினோ தாக்கத்தால் சாத்துக்குடி விலை அதிகரிப்பு
UPDATED : அக் 08, 2026 05:15 PM
ADDED : அக் 08, 2026 04:36 PM

புதுச்சேரி: எல். நினோ தாக்கத்தால் புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் சாத்துக்குடி பழத்தின் விலை அதிகரித்துள்ளது.
நாடு முழுதும் எல். நினோ தாக்கத்தால், பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு சில மாநிலங்களில் கடும் வறட்சி மற்றும் பெரும் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் அக்டோபர் மாதம் பிறந்தும் கோடை வெயிலின் தாக்கம் குறையாமல் கடுமையாக இருந்து வருகிறது. இதனால் புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் பழங்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இதில், முக்கிய பழமான சாத்துக்குடி வெயிலின் காரணமாக விற்பனையும், விலையும் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. வழக்கமாக கோடை காலத்தில் தினமும் ஒரு டன் அளவிற்கு புதுச்சேரிக்கு விற்பனைக்கு வந்த சாத்துக்குடிகள், தற்போது நிலவும் தாங்க முடியாத வெப்பம் காரணமாக மூன்று டன்னிற்கு மேலாக பெங்களூரில் இருந்து லாரிகள் மூலம் வருகின்றன.
மேலும், ரூ.800க்கு விற்கப்பட்ட 30 கிலோ எடை ஒரு மூட்டை சாத்துக்குடியின் விலை, தற்போது ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது மட்டுமின்றி விரைவில் நவராத்திரி, ஆயுத பூஜை, தீபாவளி என பண்டிகை காலம் நெருங்குவதால் இன்னும் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
